Friday 4 October 2013

கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும்தான் இளநீர் கொடுத்தார்கள்.... ரஜினிக்கு அது கூட இல்லை...




 பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம், ‘16 வயதினிலே‘. எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்திருந்த இப்படம், டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் ரஜினி பேசியதாவது: அந்த காலத்தில் ‘16 வயதினிலே‘ படத்தை 5 லட்ச ரூபாயில் தயாரித்தார் ராஜ்கண்ணு. அது சாதாரண விஷயம் இல்லை. படத்தை வாங்க அப்போது யாரும் வரவில்லை. துணிச்சலுடன் அவரே ரிலீஸ் செய்தார். பெரிய வெற்றி பெற்றது. அப்போது கமல் பெரிய ஸ்டார். ஸ்ரீதேவி பெரிய ஸ்டார். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.


இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு புதுமுகங்களை வைத்து, ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தை தயாரித்தார். பிறகு படம் தயாரிக்கவில்லை. சுயமரியாதை அதிகம் இருந்தால் சினிமாவில் இருப்பது கஷ்டம். ராஜ்கண்ணு கஷ்டத்தில் இருந்தாலும், சுயமரியாதை மிகுந்தவர். இவ்வாறு ரஜினி பேசினார். பிறகு கமல்ஹாசன் பேசும்போது, ‘‘16 வயதினிலே‘ படத்தை பார்த்து கிண்டல் செய்தவர்கள்தான் அதிகம். அதையெல்லாம் மீறி தயாரிப்பாளருக்கு தங்க கிரீடமே வைத்து விட்டார்கள் ரசிகர்கள். நானும், ரஜினியும் அன்று முதல் இன்றுவரை நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். இடைத்தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியே இருக்கிறது. இதன் பெருமை எங்களையே சேரும்‘ என்றார்.



ரஜினி சம்பளம் 3 ஆயிரம் ரூபாய்: பாரதிராஜா பேசும்போது, ‘இந்தப் படத்தில் கமலுக்கு சம்பளம் 27 ஆயிரம் ரூபாய். பரட்டை கேரக்டரில் நடிப்பதற்காக ஆள் தேடியபோது, ரஜினி கிடைத்தார். 5 ஆயிரம் சம்பளம் கேட்டார். 3 ஆயிரம் பேசி, 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தோம். 500 ரூபாய் பாக்கி இருக்கிறது. இதன் ஷூட்டிங்கில் கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும்தான் இளநீர் கொடுப்பார்கள். ரஜினிக்கு அது கூட தந்ததில்லை. அந்த நினைவுகள் இப்போது என் கண்முன் நிழலாடுகிறது. 



இவ்வாறு பாரதிராஜா பேசினார். விழாவில் பாக்யராஜ், பார்த்திபன், சித்ரா லட்சுமணன், சத்யஜித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


“ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது! – மிஷ்கின் ஓப்பன் டாக்!


“ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் இன்று தமிழகமெங்கும,ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் போஸ்டர் ஓட்டக் கூட காசு இல்லை. கடன் வாங்கித்தான் இப்போது திருச்சிக்கு வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம் காசு இல்லை. கோவையை அடுத்து திருச்சியிலும் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட போகிறேன்” என்று கூறி கலங்கினார் மிஷ்கின்.


சமீபத்தில் திரைக்கு வந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆனால் இந்த படத்தின் இயக்குனரும் ,தயாரிப்பாளருமான மிஷ்கின், தியேட்டரில் கூட்டம் அதிகம் வராததால் ஊர் ஊராக சென்று போஸ்டர் அடிக்கும் பணியை செய்துவருகிறார்.


4 - miskin poster



சமீபத்தில் திருச்சிக்கு வந்த மிஷ்கின் பத்திரிகையாளர்களையும், சினிமா ரசிகர்களை சந்தித்து மனம் குமுறினார். அப்போது”இந்த படம் பலரின் பாராட்டை பெற்றிருப்பது சோகத்திலும் ஒரு சந்தோஷத்தை தருகிறது இந்த படத்தை தயாரிக்க யாருமே முன்வரவில்லை. என் கதையைக் கேட்டு தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றார்கள் என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். ‘முகமூடி’ என்ற தோல்விப்படம் கொடுத்த பண நெருக்கடி, மன நெருக்கடிகளுக்கிடையில் ‘முகமூடி’ படத்திற்கு பிறகு ஆறாவது படம் இயக்கும் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் கூட வரவில்லை. அதனால்தான் நானே இந்த படத்தை தயாரித்தேன்.



‘முகமூடி’க்கு பிறகு அடுத்த படம் எடுக்கலாம் என்று இருந்தபோது என்னை சுற்றி இருந்தவர்கள் நிறைய பேர் மஞ்ச சேலை, ரோஜா நிற சேலையில் இரண்டு கிளுகிளுப்பு பாட்டு ,கதைக்கு சம்பந்தமே இல்லாத காமெடி ட்ராக் இந்த வகையாறாவில் ஒரு படம் இயக்க சொன்னார்கள். ஆனால் நான் என்னை சமரசம் செய்து கொள்ளவில்லை. என் அலுவலகத்தை அடமானம் வைத்துதான் இந்த படத்தின் கதையையே எழுதினேன். உலகத்தில் அதிகமான கதையம்சம் கொண்டது ராமாயணமும், மகாபாரதமும்தான்.



ஹாலிவுட் தரத்தில் படம் இயக்கவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த படத்தை நான் ஒரு பாட்டு கூட இல்லாமல் இயக்க முக்கிய தூண்டுகோலாய் இருந்தது. நான் இந்த படத்தை எனக்கான சுய பரிசோதனை முயற்சியாகத்தான் எடுத்து கொண்டேன். இந்த படத்தில் ஒரு காதல் சீன் வைக்க கூட இடம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் எனக்கு 42 வயதாகிறது; நான் மரத்தை சுற்றிவந்து டூயட் எல்லாம் பாட முடியாது. அதனால் படத்தில் டூயட் இல்லை. முதல் படத்தில் தெரியாத்தனமாக வைத்த குத்து பாட்டு தெரியத்தனமாக ஓடிபோச்சு. அடுத்த படத்திலும் தயாரிப்பாளரின் வற்புறுத்தலின் பேரில் வாய்த்த குத்து பாட்டு பயங்கர ஹிட் அடித்து, என்னை எல்லோரும் குத்துபாட்டு இயக்குனர் என அழைக்க ஆரம்பித்தார்கள். அது எனக்கு நாகரிகமாகப்படவில்லை.


இந்த படத்திலும் குத்து பாட்டில்லை என்றால் பெட்டி வாங்க மாட்டோம் என சொல்லிவிட்டார்கள். இந்த படத்தை விநியோகஸ்தர்களுக்கு நான் ‘நந்தலாலா’ தந்த அனுபவத்தால் போட்டு காட்டவில்லை. ஆனால் அதையும் மீறி ரிலீஸ் ஆனது பத்திரிகையாளர்களின் நேர்மையான பாராட்டுகளால்தான். இந்த கதையில் யாருமே ஓநாய் பத்திரத்தில் நடிக்கமாட்டார்கள் என தெரியும். அதனால்தான் என் கதையை நம்பி நானே களத்தில் இறங்கினேன்.


இதுவரை 6 படம் செய்துருக்கிறேன். ஒரு கோடி ரூபாய்க்கு கூட இந்த படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமை போகவில்லை. என்னுடைய 6 படங்களையும் பாருங்கள் ஒரு படத்திலாவது ஏதேனும் ஒரு பெண்ணை மோசமாக காட்டியிருக்கிறேனா? வயது குறைந்த இளைஞர்கள், வயதானவர்களை கிண்டல் பண்ணும் காட்சி இருந்திருக்கிறதா ? அவ்வளவு கண்ணியமாக படம் எடுத்ததுக்கு எனக்கு கிடைத்த பரிசுதான் இது.



ஒரு கோடி ரூபாய்க்கு கூட சாட்டிலைட்ஸ் உரிமை போகவில்லை. நல்ல படங்களை எடுக்கவேண்டும் என நினைத்தது தப்பா? இந்த படத்திற்காக 107 கிலோவில் இருந்து 87 கிலோவாக எடை குறைந்திருக்கிறேன். கடைசியில் இந்த படத்தை யாருமே வாங்கவில்லை. 30 லட்ச ருபாய்க்காக நாய் மாதிரி அலைந்தும் கடன் கிடைக்கவில்லை. முதல் நாள் 30 லட்ச ருபாய் கொடுக்காததால் 10 தியேட்டர்களில் எனது படத்தை எடுத்துவிட்டார்கள். சரி என நம்பிக்கை இழந்து மீண்டும் தெருவுக்கே வந்துவிடலாம் என எண்ணினேன். ஆனால் அடுத்தநாள் உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.




அந்த ஒரே காரணத்தால்தான் இன்று ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என்னிடம் போஸ்டர் ஓட்டக் கூட காசு இல்லை. கடன்வாங்கித்தான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். ஃபேஸ்புக், ட்விட்டர்தான் இந்த படத்தை காப்பாற்றியிருக்கிறது. எனினும் இந்த படத்தை விளம்பரப்படுத்த என்னிடம் காசு இல்லை. கோவையை அடுத்து திருச்சியிலும் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட போகிறேன்” என்று கூறி கலங்கினார் மிஷ்கின்.

“சரக்கடி நண்பா நீ சரக்கடி” சந்தானத்தின் குரலில் உருவான பாடல்!!!


நகைச்சுவை நடிகர் சந்தானம் முதன் முறையாக முழுப்பாடலை பாடியுள்ளார். 


ஸ்ரீகாந்த்- சந்தானத்தின் நடிப்பில் உருவாகும் படத்தில் நம்பியார் என்ற படத்தில் தான் பாடலை பாடியுள்ளார்.
 


விவேகாவின் எழுத்தில், விஜய் ஆண்டனியின் இசையில் பாடி அசத்தி உள்ளார்.
சந்தானம் பாடியது குறித்து இயக்குனர் கணேஷா, இந்த படத்தில் ஸ்ரீகாந்துடன் இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார்.



ஏன் இன்னொரு ஹீரோ சந்தானம் என்று சொல்கிறேன் என்பதை படம் வரும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள்.



நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத கதைக்களம், அதற்காக வெறும் நகைச்சுவையை மட்டும் நம்பி பயணப்படும் படம் அல்ல.


சந்தானம் சார் பட்டைய கிளப்பிய படங்களில் இதுவும் ஒன்றாக அமையும். ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் மற்ற படங்களுக்கும் இந்த படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.


படத்தில் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் வரும் பாடலை யாரை வைத்துப் பாட வைத்தால் சரியாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, விஜய் அண்டனி சார் சந்தானம் பாடினால் நன்றாக இருக்கும் என்றார்.
சந்தானம் மறுத்துவிடுவார் என்றுதான் நினைத்தோம். ஆனால் சந்தோஷமாக பாட வந்துவிட்டார்.


ஐந்து மணி நேரம் எடுக்கும் என்று நினைத்த பாடலை பதினைந்து நிமிடங்களில் முடித்துக்கொடுத்துவிட்டார்.


'ஆற அமர உக்காந்து சரக்கடி நண்பா நீ சரக்கடி' என்று ஆரம்பிக்கும் வரிகள்.
மனதுக்கும் நிஜத்துக்கும் நடக்கும் ஒரு போர் என்று சொல்லலாம் அந்த காட்சியை.


அதுவரை தன் நண்பர்கள் தண்ணியடித்தால் கோக்கை வாங்கி வைத்துக்கொண்டு கம்பனி கொடுக்கும் ஸ்ரீ முதல்முறையாக தண்ணியடிக்கும் சங்கடமான சூழ்நிலை.


இந்த காட்சியில் சந்தானம் இருக்கமாட்டார். ஆனால் சந்தானம் குரல் ஸ்ரீகாந்துக்கு செமையா பொருந்தி வந்திருக்கு என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் கூறுகையில், சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கும் மரியாதைக்குரிய நண்பர் சந்தானம். எனக்காக நடித்துக்கொடுப்பதோடு பாடியும் உதவியிருக்கிறார்.


அவரது நம்பிக்கையை நம்பியார் நிறைவேற்றும் என்றும், சந்தானத்துக்கு நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Finger Print தொழில்நுட்பத்துடன் வருகிறது iPad 5!





 மொபைல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone 5S, iPhone 5C எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை வெளியிட்டிருந்தது.



இந்நிலையில் தற்போது பிங்கர் பிரிண்ட் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள iPad 5 இனை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.


இதில் அப்பிளின் புதிய 64-bit Apple A7 Processor மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா என்பன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க் கிரகத்தில் எரிமலைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!



செவ்வாய்க் கிரகத்தில் மனிதனை குடியேற்றும் முகமாக நீர் இருப்பதையும், ஏனைய வளங்களையும் கண்டறியும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது Supervolcanoes எனப்படும் எரிமலைகள் இருப்பதற்கான ஆதாரப் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர். 



மேலும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு செவ்வாயில் இடம்பெற்றிருக்கலாம் என நம்புவதாக Michalski எனும் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.



 




 



 




 



 



இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.!....... விமர்சனம்



தமிழ் சினிமாவில் இது விஜயசேதுபதி நேரம் போல… சமீபத்திய அவர் படங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை பிடித்துக் கொள்கிறது.
படத்தில் கதையிருக்கிறதா… லாஜிக் இருக்கிறதா… நடிப்பு இருக்கிறதா… அது இருக்கிறதா… இது இருக்கிறதா… என்றெல்லாம் கேட்காமல் காசு கொடுத்து பார்க்கிறவன் ரசித்து விட்டு போகிறானா… பணம் போட்டு படம் எடுத்தவன் வசூலை வாரிக் கொள்கிறானா என்று மட்டும் பார்த்தால் இப்போதைய தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த ஓட்டும் விஜயசேதுபதிக்குத்தான் விழும்போல…



‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ படத்தின் பெயர் என்னவோ தூய தமிழில் இருந்தாலும் படம் முழுக்க வசனங்கள் மெட்ராஸ் மொழி பேசுகிறது.




4 -idharku thane asapattai balakumara.


காலையில் தொடங்கி ராத்திரி வரைக்கும் குடித்து விட்டு சும்மா ஊதாரியாக திரிந்து கொண்டு அதே கேப்பில் எதிர்வீட்டில் இருக்கிற சுவாதியை விரட்டி விரட்டி ஒருதலையாக காதலிக்கும் சுமாரான மூஞ்சு கொண்டவன் கதையின் ஹீரோவான விஜயசேதுபதி.


படத்தில் ஹீரோவுக்கு குமரவேல் என பேர் வைத்திருந்தாலும் அந்த கேரக்டரை சுமார் மூஞ்சி குமாரு என்றே அழைக்கிறார்கள்.


சுமார் மூஞ்சி குமாருவின் ஒருதலைகாதல் தொல்லையால் ஹீரோயின் சுவாதியின் அப்பா பட்டிமன்ற ராஜா தாதாவான அண்ணாச்சி பசுபதியின் உதவியை நாடுகிறார்.


ஒரு ஒயின்ஷாப் மாடியில் ஆரம்பிக்கிற கதையின் பயணம் சில நேரங்களைத்தவிர மற்ற பெரும்பாலான நேரங்களில் ஒயின்ஷாப்பிலேயே தங்கி விடுகிறது.


பசுபதியின் ஆட்களால் சு.மூ.குமாரான ஹீரோ அடித்து துவைக்கப்படுகிறார்… அடி வாங்கிய வேதனையை மறக்க நள்ளிரவில் சரக்கு தேடி அலைகிறார்.
இது மெயின் கதை…


சு.மூ.குமாரு சரக்கு தேடி அலையும் அந்த ராத்திரியில்… ஒரு ஒயின்ஷாப்பில் சரக்கு அடிக்கும் ஒருவரை சத்தமில்லாமல் கொலை செய்கிறார்கள்.
அது தெரியாமலேயே அந்த ஒயின்ஷாப்பில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து விட்டு பைக்கில் திரும்புகிற அஸ்வின் போதையில் எதிரே வந்த ஒரு பெண் மீது மோதுகிறார்.


அந்த பெண் சுயநினைவை இழக்கிறார். அஸ்வினை தேடி அவனது காதலி வருகிறார். காயமடைந்த பெண்ணுக்கு உனடியாக ரத்தம் தேவைப்படுகிறது. அந்த ரத்தப்பிரிவு சிலருக்கு மட்டுமே இருக்கும் அரிதானது.


அந்த சிலரில் நமது ஹீரோ சு.மூ.குமாரும் ஒருவர். அவரைத்தேடி அஸ்வினும் அவனது நண்பர்களும் புறப்படுகிறார்கள்….
சு.மூ.குமாரோ சரக்கு தேடி அலைகிறான்…


ஒயின்ஷாப்பில் கொலை செய்த நான்கடவுள் ராஜேந்திரனும் அவனது நண்பனும் கள்ளக்காதலியை பார்க்க போகிறார்கள்… போகும்வழியில் சரக்கு தேடி அலையும் சு.மூ.குமாருவின் செல்போனை திருடிக் கொள்கிறார்கள்…
ஒயின்ஷாப்பில் அண்ணன் கொலையானதை டிவியில் பார்த்து அதிரும் பரோட்டா சூரி அண்ணன் வீட்டு வருகிறான்… அங்கே அண்ணிதான் ஆள்வைத்து கொலை செய்ததை கண்டுபிடிக்கிறான்…


சு.மூ.குமாரு சரக்கு அடிக்காமல் இருந்தால் தான் ரத்தம் கொடுக்க முடியும் என தேடி அலையும் நண்பர்கள் கையில் ஹீரோ சிக்கினானா…
புருஷனை போட்டுத்தள்ளிய அண்ணியை பரோட்டா சூரி என்ன செய்தான்…


சு.மூ.குமாருவின் ஒருதலைகாதல் ஜெயித்ததா…



கொலையாளிகள் பிடிபட்டார்களா…


இதற்கெல்லாம் கிளைமாக்சில் விடை சொல்கிறார் இயக்குனர் கோகுல்.
படம் வேகமாக போகிறது… போகிற போக்கில் ஒவ்வொருவருக்கும் ஒரு கதையை வைத்து அதை மெயின் கதையோடு கோர்த்து ஒரு சினிமாவாக்கியிருக்கிறார் இயக்குனர் கோகுல்.


மகேஷ்முத்துசாமியின் காமிராவுக்கு பெருசாக வேலை எதுவும் தராத படம் இது. காரணம் ஒயின்ஷாப் விட்டால் ஒயின்ஷாப் இங்கே புதுசாக சொல்ல எதுவும் இல்லை…


சித்தார்த் விபின் இசையில் கானாபாலாவின் பாடலைத்தவிர மற்றது ஹீரோ பேருக்கு முன்னால் இருப்பதுபோலத்தான்.


ரொம்ப நாளைக்கு பிறகு ராஜூசுந்தரம் டான்ஸ் ஆடி நடனம் அமைத்திருக்கிறார். லியோ விஷன் ராஜ்குமார் தயாரிப்பில் ஜேஎஸ்கே சதீஷ்குமார் வெளியிட்டிருக்கிற ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் ஹீரோவின் பேரான ‘சுமார் மூஞ்சி குமார்’ போலவே சுமார் ரகம்தான்..!


ஆஹா!! ஜாலி!!!

'டிவி, பிரிட்ஜ், ஏ.சி., டூவீலர்' போன்றவற்றிற்கு, குறைந்த வட்டியில் கடன்;-


நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், உற்பத்தி பொருட்களின் தேக்கத்தை போக்கவும், 'டிவி, பிரிட்ஜ், ஏ.சி., டூவீலர்' போன்றவற்றிற்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குமாறு, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுத பூஜை, தீபாவளி என தொடர்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாடத் தயாராகும் மக்கள், புதிய பொருட்களை வாங்க, இதன் மூலம் வழி ஏற்பட்டு உள்ளது. நுகர்வோர் சாதனங்களுக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, குறிப்பிட்ட தொகையை பங்கு மூலதனமாக வழங்கும்.



கூடுதல் மூலதனம்: 



வங்கிகளுக்கு நடப்பு நிதியாண்டில், பங்கு மூலதனமாக, 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் தெரிவித்தது. இதற்கும் மேலாக, தற்போதைய அறிவிப்பின்படி, பொதுத் துறை வங்கிகளுக்கு, கூடுதல் மூலதனம் வழங்கப்படும். டில்லியில் நேற்று, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அரவிந்த் மயாராம் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.


இதை அடுத்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பொதுத் துறை வங்கிகளின் மூலதன இருப்பு விகிதத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, நடப்பு நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிதி வரம்பு, தேவையான அளவிற்கு உயர்த்தப்படும். இதன் மூலம், 'டிவி, பிரிட்ஜ், ஏ.சி., டூவீலர்' போன்ற நுகர்வோர் சாதனங்களுக்கு வங்கிகள், தாராளமாக கடன் வழங்க முடியும். இது, இச்சாதனங்களுக்கான தேவையை அதிகரிக்கச் செய்யும். அதே சமயம்,
நுகர்வோருக்கு, குறிப்பாக, நடுத்தர மக்கள் இதனால் பயன் பெறுவர். இந்த நடவடிக்கை, தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளித்து, உற்பத்தி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை அதிகரிக்க வழி வகுக்கும்.



வங்கி கடன் வளர்ச்சி:



கடந்த செப்டம்பர் இறுதி நிலவரப்படி, வங்கிகளின் கடன் வளர்ச்சி, ஆண்டுக்கணக்கில், 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே சமயம், சில துறைகளில், வளர்ச்சி மந்தமாக உள்ளது. குறிப்பாக, நுகர்வோர் சாதனங்கள் துறையின் வளர்ச்சி, குறைவாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு வழங்கும் மூலதனத்தை உயர்த்துவது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதலாக எவ்வளவு தொகையை பங்கு மூலதனமாக வழங்கும் என்பது குறித்து, அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. அதுபோல், நுகர்வோர் சாதனங்களின் கடனுக்கு, வட்டி விகிதம் எவ்வளவு குறைக்கப்படும் என்பது குறித்தும் வங்கிகள் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. வட்டி குறைப்பு அவசியம் குறித்து, ப.சிதம்பரம், விரைவில் வங்கி தலைவர்களுடன் பேச்சு நடத்த உள்ளார். இதையடுத்து, குறைக்கப்பட்ட வட்டி விகிதம்  குறித்து, வங்கிகள், அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



தேக்கம்: 



'டிவி, பிரிட்ஜ்' உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஜூலையில், 9.3 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 0.8 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், இத்துறையின் உற்பத்தி, 12 சதவீதம் குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 6.1 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. அரசின் இந்த புது நடவடிக்கை மூலம் இந்த தேக்கத்தில் மாற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கலாம்.