சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும், ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ (‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாணவர்களுக்கு இடையே ஈகைத்தன்மையை வளர்க்கவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்கி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்காகவும் ‘கொடுப்பதில் மகிழும் வார விழா’ திட்டம் (Joy of Giving Week) கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒருவருக்கொருவர் தங்களிடம் உள்ள பொருள்களை தேவைப்படுபவர்களுக்கு அன்போடும், ஆர்வத்தோடும் கொடுப்பதற்கு முன் வர வேண்டும். இப்படி பிறருக்கு கொடுத்து உதவுபவர்களே மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கின்றனர். முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்த ஒளவையார் என்று பலரை உதாரணமாக சொல்லலாம்.
எனவே, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், ஈகைப்பணிகளை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களை பற்றி கட்டுரை எழுதலாம், பள்ளிக்கு அருகில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு பரிசுகள் வழங்கலாம்.
முதியவர்களுக்கு பத்திரிகைகள் வாசித்து காட்டலாம், எழுத படிக்க தெரியாத முதியவர்களுக்கு கல்வி கற்றுத்தரலாம், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யலாம். போக்குவரத்து போலீசாருக்கு சிறு பூ கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம். பஸ்சில் இடம் கிடைக்காமல் நிற்பவர்களுக்கு சீட் கொடுத்து உதவலாம். 10 பொன்மொழிகளை எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment