Friday 25 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-04

புதியகற்காலத்தை அடுத்து வந்த காலம் உலோககாலம்.  உலோக காலம் இந்தியாவில் கி.மு 3300 ஆண்டு வாக்கில் தொடங்கியது. உலோக காலத்தை செம்பு-கற்காலம், இரும்பு காலம் என இரண்டாக வகைபடுத்தலாம்.


செம்பு கற்காலம்:
               கல் ஆயுதங்களுக்கு பதிலாக செம்பு, வெண்கலம் போன்ற பல வகையான உலோகங்களை உருக்கி கருவிகளை செய்தனர்.  உலோகங்களின் வருகையால் பொருளாதாரம், நாகரிகம் சற்று வேகமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது. சில நுண் கற்கருவிகளும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. உலோகங்களின் பயன்களை அறிந்த மக்கள் உலோகங்களை தேடி நெடுந்தூர பயணம் மேற்கொண்டனர்.



தென்இந்தியாவில் கோதாவரி, காவிரி, துங்கபத்ரா, பென்னாறு நதிகளின் பள்ளதாக்குகளில் குடியானவ சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன. கி.மு 2000 ஆண்டு வாக்கில் தென்னிந்தியாவில் உலோகங்கள் பயன்படுதியதர்க்கான சான்றுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் மிக பழமையான நாகரிகமாக கருதப்படும் மேலும் எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்ததாக கருதப்படும் ஹரப்பா நாகரிகம் ஆரம்பமானது செம்பு கற்காலத்தில் தான் .

ஹரப்பா பண்பாடு:

           கி.பி 1856 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கிழக்கிந்திய ரயில்வே கம்பனியை சார்ந்த பொறியாளர்கள்  பிரிட்டிஷ் கால இந்தியாவின் கராச்சி-லாகூர் நகரங்களை  இணைக்க இருப்பு பாதை பணிகள் மேற்கொண்ட பொழுது பூமிக்கடியில் கட்டிடங்களின் தடயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதுவே ஹரப்பா என்னும் தொன்மையான  நாகரிகம் வெளிவந்ததற்கான முதல் படி. பின்னர் அரை  நூற்றாண்டுகள் கழித்து 1912 ஆண்டில் ஹரப்பா நாகரிகத்தின்  முழுமையான பெருமைகள் வெளிவர தொடங்கின. கடந்த156 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்ட வண்ணமே  உள்ளனர்.




          1931 ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு வரலாற்று ஆசிரியர்களும் ஹரப்பா நாகரிகத்தின் காலத்தை ஒவ்வொரு விதமாக கணிக்கின்றனர். இவை அனைத்தையும் தொகுத்து  பார்க்கும் பொழுது ஹரப்பா நாகரிகத்தின் காலம் கி.மு 3300 இல்  இருந்து கி.மு 1500. எதிர்காலத்தில் வேறு மாற்றம் கூட வரலாம்.
 .
                 சிந்து பள்ளத்தாக்கின் மேற்கு பஞ்சாப்பிலுள்ள ஹரப்பா மற்றும் சிந்து மாகாணத்திலுள்ள மொகஞ்சதாரோ ஆகிய இரு  இடங்களில் தான் முதன் முதலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது இவ்விரு இடங்களுமே பாகிஸ்தானில் உள்ளன. தொடக்கத்தில் இப்பண்பாடு சிந்து சமவெளி நாகரிகம் என்றழக்கபட்டது. பின்பு சிந்துசமவெளி நாகரிகத்திற்கு அப்பாலும் இந்நாகரிகத்தின் தடயங்கள்  இருந்ததால், முதன்  முதலில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடத்தை நினைவு  கூறும் விதமாக ஹரப்பா பண்பாடு என்றளைக்கப்படுகிறது .


 உலகின்  மிக பழமையான நாகரிகமாக கருதப்படும் மெசபடோமியா, எகிப்திய நாகரிகத்திற்கு இணையானது ஹரப்பா பண்பாடு.  ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தய கால மக்களின் தடயங்கள் கிழக்கு பாலுச்தீனத்தில் காணப்படுகின்றன. எனவே ஹரப்பா  நாகரிகம் அங்கிருந்த மக்களின் குடிப்பெயர்தளால்  ஆரம்பித்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.


                சிந்து சமவெளி நாகரிக மக்கள் சிறப்பு வாய்ந்த நாகரீக  வாழ்வை பெற்றிருந்தனர் பெரும்பாலான இடங்களில் செங்கற்களாலான கோட்டைகளும் கட்டிடங்களும்  இருந்துள்ளன. பாதாள சாக்கடை அமைத்து கழிவுநீரை அகற்றும் அளவுக்கு நாகரீக வளர்ச்சியும் பெற்றிருந்தனர். மேலும்  மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடி நீளமுள்ள  மாபெரும் குளியல்குலம் அவர்களின் மேம்பட்ட வாழ்க்கையை  பறைசாற்றுகிறது. சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செரமிக் பொருட்கள் தெற்கு துர்க்மெனிஸ்தானிலும், வடக்கு ஈரானிலும் காணப்பட்ட செரமிக் பாண்டங்களுடன் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் சிந்துவெளி மக்கள் அப்பகுதிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


       
                   ஹரப்பா மக்கள்  சிவா  வழிபாட்டை  மேற்கொண்டிருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. சிந்து சமவெளி நாகரிக மக்கள் ஹிந்துக்களே என்ற முடிவுக்கு வரமுடிகிறது. இருப்பினும் வழிபாட்டு கூடங்கள், கோவில்கள்  இருந்ததற்கான சான்றுகள் இன்று வரை ஏதும் இல்லை.


 


         மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின்  படையெடுப்பினால், வறட்சி, புயல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்திருக்கலாம் என்று  பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் ஆரியர்களின்  படையெடுப்பிற்கு பின் அங்கிருந்த மக்கள் தென்இந்தியாவை  நோக்கி வந்தனர் எனவே ஹரப்பா மக்கள் பயன்படுத்திய மொழி  தமிழ் என்று கூறும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு. இதற்கு சான்றாக நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது.
                        தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

ஹரப்பா பண்பாட்டிற்கு பிறகு ஆரம்பித்த காலம் வேத காலம். இக்காலக்கட்டத்தில் ஆரியர்களின் படையெடுப்பு மற்றும் இந்தோ-ஆரிய கலாச்சாரம் உருவாகியது. இதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்!

0 comments:

Post a Comment