Saturday, 26 October 2013

முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..! - சுற்றுலாத்தலங்கள்!

   முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..!
 
த்ரபதி சிவாஜி டெர்மினஸ்!. முன்பு விக்டோரியா டெர்மினஸ். சுருக்கமாக மும்பை சி.எஸ்.டி (CST) அல்லது மும்பை VT. இப்படி குறிப்பிடப்படும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் வரலாற்று சிறப்பு மிக்கது. 
இந்தியாவின் ரயில்போக்கு-வரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது தெரிந்ததுதான். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை-  தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்துநான்கு கி.மீ பயணதூரத்தை 57நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் ரயில்பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்.

மும்பை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது, போரி பந்தர்.  ஆங்கிலேயர், ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை பாதுகாத்து வைப்பதற்காக இந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். இதற்காக ரயில் போக்குவரத்து அவசியம் என்பதை உணர்ந்தனர். கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வே என்ற அமைப்பினை ஏற்படுத்தி 1850ம் ஆண்டில் இங்கு ரயில்நிலையம் அமைத்தனர். அது போரி பந்தர் டெர்மினஸ் என அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவைகருதி ரயில்நிலைய கட்டடத்தை பிரம்மாண்டமாக கட்ட ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
கட்டடத்தை வடிவமைக்க அப்போது பிரபல நிபுணராக இருந்த பிரெடரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்பவர் பணிக்கப்பட்டார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 16.14 லட்சம்!. புதிய கட்டட மாடல் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஸ்டீவன்ஸ் சுமார் 10மாதங்கள் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாராம்.

அதில் மத்திய லண்டனின் செயின்ட் பாங்கிராஸ் ரயில் நிலையக் கட்டட வடிவமைப்பு பிடித்துப் போக அதுபோலவே மும்பை ரயில்நிலையத்தையும் அமைக்க முடிவு செய்துள்ளார். கட்டடப் பணிகள் தொடங்கின. இந்திய, இத்தாலிய, கோதிக் கட்டடக்கலைகளின் கலவையாக, ஆங்கிலேய நிபுணர்களும் இந்தியக் கைவினைஞர்களும் இணைந்து தீட்டிய அழகு ஓவியமாக உருவாக்கப்பட்டது மும்பை ரயில்நிலையம்.
மரவேலைப்பாடு, டைல்ஸ் பதிப்பு, அலங்கார இரும்பு வேலைப்பாடு என அனைத்திலும் கலைநயம் மிளிர அமைத்தனர். உள் அலங்கார வேலைப்பாடுகளில் பாம்பே ஸ்கூல் ஆப் ஆர்ட் (சர் ஜே.ஜே.ஸ்கூல் ஆப் ஆர்ட்) மாணவர்களும் கைவண்ணம் காட்டியிருக்கிறார்கள். இப்படி பிரம்மாண்டமாக உருவான ரயில்நிலையம் 1888ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இங்கிலாந்து ராணியை பெருமைப்படுத்தும் வகையில் விக்டோரியா டெர்மினஸ் என பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வேயின் தலைமையகமாக விக்டோரியா டெர்மினஸ் திகழ்ந்து வந்துள்ளது. ரயில் டிக்கெட்டு-களையும் இங்கேயே அச்சடித்து வந்துள்ளனர்.
இப்படி சிறப்புமிக்க ரயில்-நிலையத்துக்கு 1996ம் ஆண்டில் மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை உலக பண்பாட்டுச் சின்னமாக 2004ல் யுனெஸ்கோ அறிவித்தது. மத்திய ரயில்வேயின் தலைமையக-மாகவும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிர்வாக கட்டடம் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பெருமையும் இதற்கு கிடைத்துள்ளது.

0 comments:

Post a Comment