Sunday, 6 October 2013

ஸ்ரீரங்கம் கோயில் ரகசியங்கள்!



பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது.  11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். மற்ற திவ்யதேசங்களில் 9ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர். 108 வைணவ திருத்தலங்களில் இரண்டு, இந்நிலவுலகில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல். ஸ்ரீரங்கம் பெருமாள், பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள். பூலோகத்தில் சூரிய வம்சத்தில் வந்த இட்சுவாகு என்ற மன்னன் பிரம்மன் குறித்து கடும்தவம் இருந்தான். தவத்தை மெச்சிய பிரம்மன், இட்சுவாகு வேண்டுகோள்படி தான் தினமும் பூஜித்தவந்த திருவாராதன விக்ரமான பெருமாளை வழங்கினார்.

இந்த பெருமாள் இட்சுவாகு மன்னன் முதல் ராமபிரான் வரை சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம். திரேதா யுகத்தில் ராமாவதாரம் எடுத்த திருமால், ராவணனை அழித்தபின் அயோத்திக்கு பட்டம் சூட்ட தன்னோடு அழைத்து வந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது முன்னோர் பூஜித்த பெருமாள் விக்ரகத்தை விபீஷணனுக்கு அன்பாக கொடுக்கிறார். அதை தலையில் சுமந்தவாறு  இலங்கை புறப்பட்ட விபீஷணன் களைப்பால் ஸ்ரீரங்கத்தில் தரையில் வைக்கிறார். பின்னர் விக்ரகத்தை எவ்வளவு முயன்றும் அங்கிருந்து எடுக்கமுடியவில்லை. அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் தர்மவர்மன் பெருமாளையும் தொழுதுவிட்டு விபீஷணருக்கு ஆறுதல் கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் தர்மவர்மன் பெருமாள் விக்ரகத்தை சுற்றி சிறிய கோயில் எழுப்பி வழிபட்டார். பின்னர், காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோயில் மணலால் மூடி இருந்த இடம் தெரியாமல் போனது. தர்மவர்மனுக்கு பின் அவரது வழியில் வந்த கிள்ளிவளவன் காடாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருந்த போது மரத்தில் இருந்த கிளி ஒன்று கோயில் இருந்த இடம் இது தான் என்று தெரிவிக்கிறது. அந்த கிளியின் சேவையை நினைவு கூறும் வகையில்  கோயிலில் கிளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கிள்ளிவளவன் பெருமாளை தொழுது மதில்சுவரும், கோபுரமும் கட்டினான். கிள்ளிவளவனுக்கு பின் வந்த சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள்,ஆழ்வார்கள், ஆச்சார்யார்களின் தொடர்பணியால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உயர்ந்தோங்கி நிற்கிறது. வைணவத்தின் மையத் தலைமைச்செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களம். சிலப்பதிகாரம், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இக்கோயில் குறித்த வர்ணனைகள் உள்ளன. கோயில் தோன்றிய விதத்துக்கு  ஆதாரத்துடன் கூடிய கல்வெட்டு எதுவும் இல்லை. இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.

ஸ்ரீரங்கத்தில் 1961-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி 42 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்து உள்ளனர். தற்போது மக்கள் தொகை 3 லட்சத்தை எட்டி உள்ளது. கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள்  உள்ளனர். உள்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு  உரியவனாய் முறையே சங்கு, தாமரை வடிவங்களில் சங்கநிதி, பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்கசொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து, வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளது.

மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு  மெருகூட்டப்படுகிறது.


இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில்(ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும். கோயில் தல விருட்சம் புன்னை மரம்,  மூலவர் ஸ்ரீரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.

கோயில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.

ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி.  13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. 1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெற்கு ராய கோபுரமே பிரதான நுழைவாயில். கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது.  ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர். நித்ய வழிபாடுகள் இன்று நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான்.  ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. 7மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது.

கோபுரம் ஆசியாவிலேயே பெரிது.இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம், வாத்தியத்திற்கு பெரிய மேளம், பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.

ஸ்ரீரங்கம் கோயில் நகைகளின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும். மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.

0 comments:

Post a Comment