Monday 7 October 2013

மாய உலகத்திற்குள் மூழ்கி போன மருத்துவம!


எதுவும் புரியாமல், என்ன நடக்கிறது என்றே தெரியாமல், எதற்காக இவை செய்யப்படுகின்றன என்று கேட்கக் கூட முடியாத நிலைக்கு நோயாளிகளைத் தள்ளும் மாய உலகமாக, மருத்துவ உலகம் மாறி வருகிறது. இதில் எல்லா மருத்துவர்களையும் குறை கூறுவதற்கு இல்லை. ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள்.


பொதுவாக ஸ்கேன் என்பது இருவகைப்படும். சாதாரண அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். மற்றொன்று சி.டி. ஸ்கேன் (கம்ப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன்) என்பதாகும். இதில் முதல் வகை ஸ்கேனுக்கு குறைந்தது 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இரண்டாவது வகையான சி.டி. ஸ்கேன் என்பது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


7 - health_CT_SCAN_

 


இதற்கு என்ன காரணம் – சி.டி. ஸ்கேன் எடுக்கும் இயந்திரத்தின் விலை அதிகமோ, இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரம் என்பதாலோ, அதனை பராமரிப்பது கடினம் என்றெல்லாமோ நாம் கருதலாம். ஆனால் உண்மையில், சி.டி. ஸ்கேன்களின் விலை பல ஆயிரங்களைத் தொட்டதற்கு “ஒரு சில மருத்துவர்கள்’ மட்டுமே காரணம்.


ஒரு சி.டி. ஸ்கேன் எடுத்தால், அதற்கு 6 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் அதிகபட்சமாக 4 ஆயிரம் வரை சி.டி. ஸ்கேன் மையத்தால், மருத்துவர்களுக்குக் கமிஷனாக அளிக்கப்படுகிறதாம்! உண்மையிலேயே ஒரு சி.டி. ஸ்கேன் செய்ய வெறும் 1,500 ரூபாய் கூட போதுமாம். ஆனால், சி.டி. ஸ்கேனுக்கு பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கு அளிக்க வேண்டிய கமிஷன் தொகையுடன் சேர்த்துத்தான் கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிக்கப்படுகிறது.


சி.டி. ஸ்கேன் மையங்களுக்கு கட்டணத் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே செல்கிறது. அதில்தான் மையத்தின் அனைத்துச் செலவுகளையும் நிர்வாகிகள் சமாளிக்க வேண்டும். நோயாளிகளிடம் இருந்து பறிக்கப்படும் கட்டணம், அதனைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்குச் செல்கிறது என்றால்,மருத்துவர்கள், சி.டி. ஸ்கேன் என பரிந்துரைப்பதையே அல்லவா சந்தேகிக்கப்பட நேரிடுகிறது!


இந்த விஷயங்கள் தெரிந்திருந்ததால், நமது நண்பர் ஒருவர், மருத்துவர் பரிந்துரை செய்த ஸ்கேன் மையத்தைத் தவிர்த்துவிட்டு வேறொரு ஸ்கேன் மையத்துக்குச் சென்று சில ஆயிரங்கள் குறைவான கட்டணத்தில் சி.டி. ஸ்கேன் செய்து கொண்டார். பிறகு, சி.டி. ஸ்கேன் முடிவுகளை எடுத்துக் கொண்டு, உரிய மருத்துவரிடம் காண்பிக்கச் சென்றபோது, அந்த மருத்துவர், சி.டி. ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கிக்கூடப் பார்க்கவில்லை. அதற்குக் காரணம், அந்த சி.டி. ஸ்கேன் வேறொரு மையத்தின் கவரில் இருந்ததுதான். அதனால், அவர் சி.டி. ஸ்கேன் எழுதிக் கொடுத்ததையோ, நோயாளி அதை எடுத்ததையோ முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டார். நண்பர் சி.டி. ஸ்கேன் அறிக்கையைப் பார்க்குமாறு வற்புறுத்தியதன் அடிப்படையில் அதனைப் பார்த்துவிட்டு, “ஒன்றுமில்லை போய் வாருங்கள்’ என்று கூறிவிட்டாராம். குறிப்பாக, சி.டி. ஸ்கேனை எடுத்து பார்த்துக் கொண்டே ஒரு வாக்கியத்தைக் குறிப்பிட்டாராம் அந்த மருத்துவர்…


அதாவது, “நான் குறிப்பிட்ட சி.டி. ஸ்கேன் மையத்தில் நீங்கள் ஸ்கேன் செய்திருந்தால், ஒரு வேளை பரிசோதனையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அங்கே உங்களுக்கு இலவசமாக மற்றொரு முறை ஸ்கேன் எடுக்க நான் வலியுறுத்தியிருப்பேன். அதனால்தான் அந்தக் குறிப்பிட்ட ஸ்கேன் மையத்தில் உங்களை ஸ்கேன் எடுக்கச் சொன்னேன். இப்போது அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது’ என்றாராம். மொத்தத்தில், அவர் குறிப்பிட்ட ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் எடுக்காததை ஒரு பெரும் குற்றமாகவே நோயாளி மீது திணித்துள்ளார்.


மனம் நொந்த நண்பர், இறுதியாக அந்த சி.டி. ஸ்கேனை எடுத்துக் கொண்டு வேறொரு மருத்துவரிடம் காண்பிக்க, நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதாகக் கூறி உடனடியாக சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த மருத்துவரின் அலட்சியத்தை அறியாத நண்பர், “நமக்கு எதுவும் இல்லை’ என்று வீடு திரும்பியிருந்தால்…


சில சி.டி. மையங்களில், மருத்துவப் பரிசோதனைகளே தலைகீழாக செய்யப்படுகின்றன.அதாவது, ஒரு நோயாளிக்கு இரண்டு விதமான மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றால், அதில் விலை அதிகம் உள்ள மருத்துவச் சோதனைகளை உடனடியாகவும், முதலிலும் செய்து கொள்ளும்படி நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், விலை குறைவான மருத்துவப் பரிசோதனையை முதலில் செய்து, அதில் நோய் இருப்பது உறுதியானால்தான் விலை அதிகமான அடுத்தகட்ட பரிசோதனை செய்யப்பட வேண்டும்.


ஆனால், விலை குறைவான மருத்துவப் பரிசோதனையை முதலில் செய்து, அதில் எதுவும் பிரச்னை இல்லை என்பது உறுதியானால், விலை அதிகமான மருத்துவப் பரிசோதனையை செய்யவேண்டிய அவசியம் ஏற்படாமல் போனால், இதுபோன்ற பரிசோதனை மையங்கள் எவ்வாறு லாபம் சம்பாதிப்பது என்பதால், முன்னுக்குப் பின்னாக சில மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்படுகின்றனவாம்!


எனவே, எந்த விதமான மருத்துவப் பரிசோதனையாக இருந்தாலும், நமக்கு பரிந்துரைக்கும் மருத்துவர் கூறியுள்ளார் என்பதற்காகவே அங்கு செல்லாமல், நன்கு விசாரித்து உரிய கட்டணம் என்ன என்பதை தெரிந்து கொண்டு, நமது நோய்க்கு இந்தப் பரிசோதனைகள் தேவைதானா என்பதையும் அறிந்து கொள்வது நல்லது. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமா?

0 comments:

Post a Comment