Wednesday, 27 November 2013

அகத்தின் அழகு...கட்டுரை.!

அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒருசொல் ‘பர்சனாலிட்டி’ அதாவது ஆளுமை. இச்சொல்லுக்கு பலர் பலவிதமாக பொருள் கொள்கின்றனர். ஆடை அலங்காரத்துடன் ஒய்யாரமாக வரும் ஒரு நபரைப் பார்த்து ‘என்ன பர்சனாலிட்டி!’ என்று வியப்பதுண்டு. இதுதான் ஆளுமை? என்று கேட்டால் ‘இல்லை’ என்பதுதான் பதில். அதாவது ஆளுமைப் பண்பின் ஒரு சிறு பகுதி இது என்று கூறலாமே அன்றி இதுவே ஆளுமைப் பண்பு என்று கூறமுடியாது.

ஒரு மனிதனின் ஒட்டு மொத்த வளர்ச்சிதான் ஆளுமை என்பது. ஆளுமை என்பது புறத் தோற்றத்தையும், அகத்தோற்றத்தையும் உள்ளடக்கியது. இவ்விரண்டில் புறத் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்வது எளிது. எடுத்துக்காட்டாக ஒருவரை பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்று ஒரு நூறு ரூபாய் செலவு செய்தால் போதும். முகப் பொலிவு வந்து விடும். ஒரு ரெடிமேட் ஆடை கடைக்கு சென்று ஆயிரம் ரூபாய் செலவு செய்து ‘டிரஸ்’ வாங்கி அணிவித்தால் போதும். பகட்டான தோற்றம் தானாக வந்து விடும்.

ஆனால்… அகத்தோற்றத்தை அழகுபடுத்து வது அவ்வளவு சாதாரண காரியமல்ல, பணத்தால் சாதிக்கக்கூடியதும் அல்ல. பேசுதல், எண்ணுதல், நினைத்தல், நேசித்தல், பழகுதல் போன்றஅனைத்தையும் உள்ளடக்கியது அகத்தோற்றம். புறத்தோற்றத்தை அழகுபடுத் தியது போல் அதிரடியாக அகத்தோற்றத்தை அழகுபடுத்த முடியாது. ஒரு விதை முளைத்து வளர்ந்து செடியாவதைப் போல் படிப் படியாகத்தான் அகத்தை அழகு படுத்த முடியும்.

ஒருவரது புறஅழகுதான் பிறர் கண்களுக்கு முதலில் தெரியும். அதுதான் பிறரோடு முதலில் பேசும். ஒரு கூட்டத்தில் முதன்முதலாக ஒருவரை சந்திக்கும்போது அவருடைய ஆளுமையை அவரின் புறத்தோற்றத்தை வைத்து கணிக்கிறோம். அவரோடு பேசிப் பழகி அவரின் அகத்தோற்றத்தை அறிந்த பிறகே அவரது ஆளுமைப் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆரம்பத்தில் புற அழகு மட்டுமே பேசும். கொஞ்சம் கொஞ்சமாக அகஅழகு பேச ஆரம்பித்ததும் புறஅழகு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ஆக அகத்தின் அழகுதான் ஒருவரின் உண்மையான அழகு.

மனிதனின் ஆளுமைப் பண்புகளுக்கு முக்கிய காரணங்களாக இருப்பவை 1) அவனது ‘மரபுநிலை’ (Heredity) 2) அவன் வளரும் ‘சூழ்நிலை (Environment). மரபுநிலை என்பது பிறக்கும் போதே கொடுத்தனுப்பப்படும் சீதனம். அதாவது ஒரு குழந்தை தாயின் கருவறையில் கருமுட்டையாக உருவெடுக்கும்போதே, தன் தாய் தந்தை ஆகியோரிடமிருந்து சில முக்கிய பண்புகளைக் குரோமசோம்களின் வாயிலாக பெறுவது.

சூழ்நிலை என்பது வளரும் போது நமக்கு கிடைப்பதும், நாமே பெற்றுக் கொள்வதும் ஆகும். அதாவது ஒரு குழந்தையின் வளர்தலுக் கும், வளர்ச்சிக்கும் காரணமாயிருப்பவை அனைத்தும் ‘சூழ்நிலை’ எனப்படும். ஒரு குழந்தையின் நடத்தையைப் பாதிக்கும் மற்றவர் களின் செயல்கள், பேச்சுகள், மனப்பாங்குகள் ஆகிய அனைத்துமே சூழலில் அடங்கும்.

இவ்விரண்டில் எது முக்கிய பங்கு வகிப்பது என்பதைப் பற்றி விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ‘ரோஜா செடியி லிருந்து மல்லிகைப் பூவை பெறஇயலாது என்றும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்றும் மரபு நிலைவாதிகள் வாதிடுகின்றனர்.

ஒருவனால் செய்து முடிக்கப்படும் செயல் களை, தக்க வாய்ப்புகளும், ஊக்குவிக்கும் சூழ்நிலையும் தரப்பட்டால் வேறு எந்த ஒருவனாலும் செய்து முடிக்க இயலும்’ என்பது சூழ்நிலைவாதிகளின் கருத்தாகும். சூழ்நிலை வாதியான வாட்சன் ‘என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள். எத்தன்மை யுடையவர்களாக அவர்கள் வரவேண்டும் என்று முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சூழ்நிலை யின் உதவி கொண்டே பேரறிஞர்களாகவோ, பெருங்குற்றவாளிகளாகவோ அவர்கள் உருவாகும்படி செயது காட்டுகிறேன்”என்கிறார்.

மரபு, சூழ்நிலை ஆகிய இந்த இரண்டும் இணைந்தே மனிதனின் ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. ஒன்று மட்டும் தனித்து இயங்குவதில்லை. பிறப்பால் பெற்றதிறன்களும் ஆற்றல்களும் முறையான பயிற்சி இன்றி மலர முடியாது. மாங்கொட்டையிலிருந்து பலாச் செடிûயைப் பெறமுடியாது. அதே போன்று மாங்கொட்டையைத் தகுந்த நிலத்தில் இட்டு நீர்பாய்ச்சி உரமிட்டு வளர்த்தால் ஒழிய அது செடியாக வளர்ந்து மரமாகி காய்ப்பதில்லை.

ஒரு குழந்தை நல்ல மனிதனாக வளர்ச்சி யடைய வேண்டுமெனில் அக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, சமூக வளர்ச்சி, ஆளுமை வளர்ச்சி ஆகிய அனைத்தும் வளர்ந்திட வேண்டும். இவையனைத்தும் வளர்வதற்கான உள்ளாற்றல்களை குழந்தை மரபுவழியே பெற்றிருந்தாலும், அவ்வாற்றல்களின் வளர்ச்சி யையும், தரத்தினையும் நிச்சயிப்பது சூழலே யாகும். ஆக குழந்தையின் வளர்ச்சி என்பது மரபு, சூழல் இவை இரண்டின் கூட்டு விளைவாகும்.

ஆனால் ‘மரபு, சூழல் ஆகிய இவ்விரண்டில் எது மேலோங்கி நிற்பது’ என்று ஒரு பட்டி மன்றம் வைத்தால் நிச்சயம் ‘சூழல்’தான் வெல்லும். அதாவது மரபுக்கூறுகளை மாற்றி அமைக்கும் சக்தி நம் கையில் இல்லை. ஆனால் மரபுக் கூறுகளின் குறைநிறைகளை சூழலின் வாயிலாக மாற்றி அமைக்கும் சக்தி நம் கையில்தான் உள்ளது. ‘விதியை மதியால் வெல்லலாம்’ என்ற பழமொழி இக்கருத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஒரு மனிதனுடைய சிறந்த ஆளுமைப் பண்பின் ரகசியம் அவன் எவ்வாறு ‘சூழல்’ என்கிற காரணியை தன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதில் மறைந்திருக்கிறது.

மக்களை ‘நிறையாளுமை’ உடையவர்கள் என்றும் ‘குறையாளுமை’ உடையவர்கள் என்றும் இரண்டு வகைகளாக பிரிக்கலாம். நிறையாளுமை உள்ளவர்கள் பொறுப்புகளை முன்வந்து ஏற்றுக் கொள்வார்கள். பிரச்சனைகளை சந்திக்க தயங்க மாட்டார்கள். சுய மதிப்பீடு செய்து கொள்ளுவார்கள். பிறர் நலத்தில் அக்கறைகாட்டுவார்கள். அனைத் திற்கும் மேலாக தாமும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். தம்மோடு இருப்பவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். குறையாளுமை உள்ளவர்கள் தாழ்வு மனப்பான்மை, அவநம்பிக்கை, குழப்பம், குற்றஉணர்வு ஆகியவற்றின் இருப்பிடமாக இருப்பார்கள். இவர்கள் தங்களையும் சோகத்தில் ஆழ்த்திக் கொண்டு உடன் இருப்பவர்களையும் சோகத்தில் தள்ளி விடுவார்கள்.

நல்ல ஆளுமை உள்ளவன்தான் நல்ல தலைவனாக விளங்க முடியும்.

தலைமை என்பது ஒரு நிறுவனத்துக்கு அல்லது ஒரு பள்ளி கல்லூரிக்கு மட்டும்தான் என்று நினைத்து விடக்கூடாது. குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி ஆகியோரும் கூட ஒரு வகையில் தலைமை பீடத்தில் இருப்பவர்கள் தாம். சாதாரணப் பேச்சில் கூட ஒருவரின் ஆளுமைத் தன்மை வெளிப்படும். உதாரணமாக, “நீங்கள் வாங்கி வந்த காய்கறி மகா மட்டம்” என்று மனைவி சொன்னால் ‘எந்த நாய் சொன்னது’என்று கேட்கக் கூடாது. ‘அப்படியா? தப்பாக வாங்கி வந்துவிட்டேன். அடுத்த முறைசரியாக வாங்கி வருகிறேன்’ என்றால் பிரச்சனை அத்துடன் முடிந்து விடும். “சாப்பாடு மகா மட்டம்” என்று கணவன் சொன்னால் “எனக்கு தெரிந்தது இவ்வளவுதான், வேணும்னா நீங்க அம்மா வீட்ல போய் சாப்பிடுங்க” என்று சொல்லக் கூடாது. இன்றைக்கு ஏதோ இப்படி நடந்து போச்சு, நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்” என்று சொல்ல வேண்டும். எதையும் அடித்துப் பேசவோ, தாக்கிச் சொல்லவோ கூடாது. இதமாகவும் பதமாகவும் கூறவேண்டும்.

பெரும்பாலான நேரங்களில் பிரச்சனை களுக்கு காரணமாக அமைவது நிகழ்வுகளை அணுகும் விதம்தான். நிகழ்ச்சி ஒன்று, ஆனால் பார்க்கும் பார்வை வேறு. மாமன்னன் அக்பர் ஒரு கனவு கண்டார். தன்னுடைய ஒரு பல்லைத் தவிர அனைத்து பற்களும் விழுந்து விட்டது போல் கனவு. இந்த கனவுக்குப் பலன் என்ன என்று சோதிடர்களிடம் கேட்க,”அரசே! உங்கள் உறவினர்கள் எல்லோரும் உங்களுக்கு முன்னதாக இறந்து விடுவார்கள். நீங்கள் மட்டும் தனியாக விடப்படுவீர்கள்” என்று பொருள் கூறினார்கள். இந்த விளக்கம் மன்னருக்கு வருத்தத்தை அளித்தது. அப்போது அரசவைக்குள் நுழைந்த பீர்பாலை நோக்கி கனவுக்கு பொருள் கேட்கிறார் அரசர். ‘மன்னர் பெருமானே! உங்கள் உறவினர்களைக் காட்டிலும் நீங்கள் மட்டும் எல்லாவிதமான இன்பங்களையும் பேறுகளையும் பெற்று நீடுழி வாழ்வீர்கள்” என்று விளக்கம் அளித்தார். மன்னன் மனமகிழ்ந்தார், பொன்னும் பொருளும் பரிசாக அளித்தார். உள்ளம் ஏற்றுக் கொள்ளும் வகையில் உரைத்தால்தான் மகிழ்ச்சி, எனவே நிறையாளுமை நிகழ்வில் இல்லை, பார்க்கும் பார்வையில் இருக்கிறது.

“நல்லோரைக் காண்பதுவும் நன்றே: நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே: நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே: அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று”-ஔவைப் பாட்டியின் மூதுரைப் பாடல் இது. நல்லதைக் காண்பது, கேட்பது, உரைப்பது, நல்லவர்களோடு சேர்ந்து இருப்பது-இப்படி நல்ல சூழலில் ஒருவர் இருந்தால் அவர் எப்போதும், எதிலும், எங்கும், யாரிடமும் நல்லதையே கண்பார். அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தைகளே வரும். அவர் எண்ணமும் செயலும் எந்த நிலையிலும் நல்லனவாகவே இருக்கும்.

மகாபாரத்தில் ஓர் இடம். பிறவிக் குருட னான திருதராஷ்டிரன் தனது புத்திரர்களாக தருமனையும் துரியோதனனையும் அனுப்பி உலகமும். மனிதர்களும் எவவிதம் இருக் கிறார்கள் என்று அறிந்து வரச் சொன்னார். தருமன் உலகையும் மனிதரையும் பார்த்து விட்டு “மக்கள் மிக நல்லவர்களாக வாழ்கிறார்கள்” என்று கூறினான். ஆனால் துரியோதனன் வந்தது “உலக மக்கள் மிகவும் கெட்டவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினான்.

நம்மிடையேயும் துரியோதனர்களும் தருமன் களும் இருக்கிறார்கள். துரியோதனர்கள் எப்போதும் எதிர்மறையாகவே உலகைப் பார்ப் பவர்கள். தருமன் போன்றோர் உடன்பாட்டு நோக்கில் உலகைக் காண்பவர்கள். விடிந்ததும் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று துடிதுடிப்போடு இருப்பவர் களுக்கு அடுத்தவர்களின் குறைகளைப் பார்க்க எண்ணமும் இருக்காது, நேரமும் இருக்காது. ஆனால் வெறுமனே உட்கார்ந்து கொண்டு வெட்டியாய் இருப்பவர்களுக்கு அடுத்தவர் களின் செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்வது முழுநேரப்பணி. இவர்களுக்கு அடுத்தவர்களின் நிறைகள் தெரியாது, குறைகள் மட்டுமே தெரியும். நிறைகளை பாராட்டுவது இவர்கள் நோக்கமல்ல. குறைகளை விமர்சிப்பதுதான் ஒரே நோக்கம்.

இயற்கையின் படைப்புகள் அனைத்துமே ஒன்று என்று கருதப்பட்டாலும், ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் வேறுபட்டது. உலகில் உள்ள 600 கோடி மக்களும் ‘மனிதர்கள்’ என்றஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் உருவத்தாலும், உள்ளத்தாலும் தனித் தனியான வர்கள். ஒருவரைப் போல மற்றொருவர் தோன்றலாம், ஆனால் உண்மையில் இருவரும் வெவ்வேறு மனிதர்கள்.

கண்ணால் காணுகின்ற உருவத்தில், தோற்றத்தில் மட்டுமின்றி கண்ணுக்குப் புலனாகாத குணத்தில், எண்ணத்தில், உணர்வில், செயல்படும் திறத்தில், சிந்தனையில், அறிவில், அனுபவத்தில், வயதில், பழக்கவழக்கத்தில், விருப்பு வெறுப்பில் இன்னும் பல்வேறு நுட்பமான தன்மைகளில் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபாடு கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

எனினும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருத்துக்கு இணங்க நம் அகத்தின் எண்ணங்களும், சிந்தனைகளும் நம்மையும், நாட்டையும் வளப்படுத்தும் நல்வித்தாக அமைய வேண்டும். காலவெள்ளத்தில் கரைந்து போகும் புறஅழகைக் காட்டிலும் காலத்தை வென்று நிற்கும் அகத்தின் அழகுக்கு அழகு சேர்ப்போம்.

0 comments:

Post a Comment