Saturday 14 December 2013

கூந்தல் முடியை அடர்த்தியாக‌ கருமையாக வளர்ப்பது எப்படி?




பெண்களை அழகிய‌ பதுமையாக்க‌, அவர்களின் கூந்தலுக்கும் முக்கியப் பங்கு உண்டு. சிலர் கூந்தலினை அதிக‌ கவனத்துடன் பராமரித்தாலும் அவர்களுக்கு அதற்கான‌ பலன் கிடைப்ப்பதில்லை. கூந்தல் முடி உதிர்தல், மாறான‌ நிறம் மற்றும் நீளமின்மை ஆகியப் பிரச்சனைகள் இயல்பானதாகும். பெண்களின் கூந்தல் முடி உதிர்வதற்கு பல‌ காரணங்களைக் கூறலாம். அக்காரணங்களை ஆராய்ந்து அறிந்து அக்குறை நிறைவுகளை நிவர்த்தி செய்தால் முடி உதிர்வதை எளிதாகத் தவிர்த்து விடலாம். முடி அடர்த்தியானதாக‌ மற்றும் கருமை நிறமாக‌ மாற்றுவதற்கு கீழ்காணும் சில‌ எளிய‌ இயற்கை முறை குறிப்புகளைப் பார்க்கலாம்.

வைட்டமின், 'பி' குறைபாடு

வைட்டமின், 'பி' குறைவினால், சில‌ருக்கு தலைமுடி விரைவில் நரைக்க ஆரம்பித்துவிடும். ஊட்டசத்து மிக்க உணவினை உட்கொள்ளுவதனால் இக்குறைபாட்டை நீக்கலாம். நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, சிறிது நேரம் ஊற வைத்த‌ பின் குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலும் குறைந்துவிடும்..
மசாஜ் செய்தல்

*உங்கள் வீட்டில் உபயோகிக்கப்படும் தேங்காயில் ஏதேனும் ஒன்று அழுகிப்போனால் அதைத் தூக்கி எறியாமல், அதனுடன், சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைக்கவும். பிறகு நன்றாக, 'மசாஜ்' செய்தால், முடி வேர்கள் வலுப்பெறும்.

* பொடுகு தொல்லையைப் போக்க‌ இரண்டு ஸ்பூன் வினிகருடன், கடலைமாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊறவைத்து, முடி வேர்களில் படும்படி பூசி, அரைமணி நேரம் கழித்து அலசவும்.

* தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பால் பிழியவும். தேங்காய்ப் பாலினை இரும்பு கடாயில் காய்ச்சி அதில் கிடைக்கும் எண்ணெயை, தலையில் தடவவும். சிறிது நேரம் ஊறியபின், சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* நல்ல மரச் சீப்பினால் தலைமுடியை அழுந்த வாரினால், முடி வேர்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு, முடி வளர்தலும் தூண்டப்படுகிறது.

* கஞ்சி தண்ணீரில் (சாதம் வடித்த கஞ்சியில்) வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக் குளிக்கலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியூட்டும் விளக்கெண்ணெயை இரண்டு டேபிள் ஸ்பூன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, இலேசாக சுடவைத்து, முடி வேர்களில் நன்றாகப் படும்படி தடவவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்த சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க இவ்வழியினை பின்பற்றுதல் சிறப்பாகும்.

* ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப் பயறு அரைப் பங்கு, புங்கங்காய் கைப்பிடி அளவு எடுத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருட்கள் இல்லாத இந்தப் பொடி, எந்த வித தீங்கும் ஏற்படுத்தாது. இதனை ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.

* பித்தம் உடலில் அதிகமானாலும் தலைமுடியில் நரை ஏற்படும். இதற்கு, கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் குணம் தெரியும்.

* தேங்காய் எண்ணெயை வீட்டில் தயார் செய்வோர் அல்லது அங்காடியில் வாங்குவோர் அந்த தேங்காய் எண்ணெயை சூடாக்கியபின் அதில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு தயார் செய்யப்பட்ட‌ எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக வளரும்.

* பெரும்பொழுதினை வெயிலில் கழிப்போர், வெயிலில் அலைந்து, வேலை செய்வோர், தினமும் உச்சந்தலையில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், கண்ணுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். இப்படி செய்வதனால் முடியும் உதிராது.

0 comments:

Post a Comment