Sunday, 15 December 2013

பயம் .....?



நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பயம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. உதாரணமாக, பள்ளி மாணவனுக்கு ஆசிரியரைக் கண்டால் பயம். பலகோடி ரூபாய் மூதலீட்டில் தொழில் செய்பவருக்கு வருங்காலத்தில் தொழிலின் முன்னேற்றம் குறித்து பயம். ஆக, பயம் உருவாகின்ற விதம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அனைவரின் மனதிலும் பயம் என்ற ஒன்று ஆழமாக குடிகொண்டு உள்ளது.


உதாரணமாக, இங்கு இராமசாமி என்ற இளைஞனை எடுத்துக் கொள்ளலாம். இவனது வயது 18. பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். எங்கெல்லாம் உறவினர்கள், பெற்றோர்கள் தேடுவார்கள் என்று அறிந்து வேறொரு திசையில் நடக்க ஆரம்பித்தான். நன்றாக இருட்டிய நிலையில் ஓர் ஊரைக் கடந்து சென்றான். அந்த இடம் நிறைய மரங்கள் நிறைந்த வெட்ட வெளியாக இருந்தது. அங்கே சென்று பெரிய மரத்தின் கீழ் இழைப்பாறினான். மரத்தின் பக்கத்தில் பூங்காக்களில் இருக்கும் நாற்காலி மேடையில் நன்றாக தூங்கிவிட்டான்.


மறுநாள் காலையில் சூரிய ஒளி கண்ணில்படும்போது தான் எழுந்தான். சுற்றியுள்ள இடத்தைப் பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது. அது ஒரு ‘சுடுகாடு’. இராமசாமிக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடியும். இந்த விஷயம் முந்தைய நாள் இரவு தெரிந்திருந்தால் அந்த இடத்தில் தங்கியிருப்பானா… வேறு வழியே இல்லாமல் தங்கியிருந்தாலும் உறங்கியிருக்க முடியுமா?


அதற்குக் காரணம் சுடுகாடு என்றவுடன் மனதில் இருக்கும் பதிவுகள், அனுஷ்ய சக்திகள், பேய், தொல்லை போன்றவைதான். இந்தப் பதிவுகள் எப்போது சம்மந்தப்பட்டவரைப் பாதிக்கும் என்றால், ‘பயம்’ என்பது அடையாளப்படுத்தப்படும் போதுதான், பயப்படக் காரணம் இருக்கிறது என்பதை உணரும்போது தான்.


நாம் பயத்தை வெற்றி கொள்ள வேண்டுமானால் ‘நான் தைரியமாக இருப்பேன், பயப்படமாட்டேன்’ என்று ஆயிரம் முறை சொல்லிக் கொள்வதால் பயம் விலகிவிடாது. பயப்படுவதற்குக் காரணமான எண்ணங்களை, மனப்பதிவுகளை மையப்படுத்தி அவற்றை மானசீகமாக மனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.


பயங்களில் பலவிதம் இருக்கின்றன:


    * பரிட்சை பயம்
    * ஆசிரியர் பற்றிய பயம்
    * எதிரிகள் பயம்
    * சூழ்நிலைச் சார்ந்த பயம்
    * ஒரு சிலருக்கு மனைவியைய் பார்த்தாலே பயம்
    * ஊசி என்றாலே ஒரு சிலருக்கு பயம்
    * இரத்தத்தைப் பார்த்தாலே பயம்
    * இறந்தவர்களைப் பார்க்க பயம்
    * உயரம் என்றாலே பயம்
    * பழங்கால கட்டிடங்களைப் பார்த்தாலே பயம்
    * ஊனமுற்றோரைப் பார்த்தால் பயம்


இன்னும் ஒரு சில பயங்கள்:


    * பொருட்கள் கலைந்திருந்தால், அவற்றைப் பார்க்க பயம்
    * காலியான இடங்கள்… அதுவும் பெரிய அறைகளைப் பார்த்தால் பயம்
    * மூடிய கதவைப் பார்த்தால், அந்த அறைக்குள் இருக்க பயம்
    * மனித கழிவைப் பார்த்தால் பயம்
    * மலர்களைப் பார்த்தால் பயம்
    * பனிமூட்டத்தைப் கண்டால் பயம்
    * அந்நியரைக் கண்டால் பயம்
    * சந்தோஷமாக இருக்க பயம்
    * எதைப் பார்த்தாலும் பயம்


இது போதாதென்று அன்றாடம் நாம் கேள்விப்படும் தகவல்கள், செய்திகள் மற்றும் வதந்திகள் போன்றவையும் பயத்தை உண்டாக்குகின்றன.


இவை அனைத்தையும் தனித்தனியாய் பார்த்தால், கேள்விப்பட்ட செய்திகள், தகவல்கள், எதிர்கொள்ள வேண்டிய நபர்கள், சூழ்நிலைகள் ஆகியவற்றைவிட ‘நம்மால் சமாளிக்க முடியாதே, என்ன செய்யப் போகிறோம்?’ என்ற நினைப்பும், ஒரு வேளை பயப்படுவது நடந்து விட்டால் என்ன செய்வது! என்ன செய்வது!! என்ற சிந்தனையும் பயத்தின் காரணங்களாக இருக்கும்.
‘பயம்’ நாம் அஞ்சி நடுங்கும் விஷயங்களில் சூழ்நிலைகளில் இல்லை. அது பற்றிய நமது மனப்பதிவுகளின் நம்பிக்கைகள், சிந்தனைகள், எண்ணங்கள் தான் பயத்தை உருவாக்கக் கூடியவைகளாக இருக்கும்.

0 comments:

Post a Comment