Wednesday 4 December 2013

கல்லெறிந்தவனுக்கும் கருணை!

அந்த நாட்டுக்கு மகான் ஒருவர் வந்தார். அவரை தரிசிக்க பெரும் கூட்டம் திரள்கிறது என்பதை அறிந்த அந்த நாட்டு மன்னனுக்குப் பொறாமை.


'பண பலமும் அதிகார பலமும் கொண்ட தன்னை விட, அந்த மகான் எந்த விதத்தில் உயர்ந்தவர்?' என்று எண்ணியவன், இது பற்றி அறிய மாறு வேடத்தில், மகானின் இருப்பிடத்துக்குச் சென்றான்.


அங்கு, மரத்தடியில் அமர்ந்து அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார் மகான். அப்போது, திடீரென்று பறந்து வந்த கல் ஒன்று மகானின் நெற்றியை பதம் பார்த்தது. கூட்டத்தினர் கல்லெறிந்தவனைப் பிடித்து, தண்டிக்க முற்பட்டபோது, மகான் தடுத்தார்.


''ஏனப்பா என் மேல் கல்லெறிந்தாய்?'' என்று அவனைப் பார்த்துகேட்டார் மகான். அவன், ''பழம் பறிப்பதற்காகக் கல் எறிந்தேன்.


 அது, தங்கள் மேல் விழுந்து விட்டது!'' என்றான்.அவனை ஆறுதலுடன் அணைத்துக் கொண்ட மகான், சுற்றி இருப்பவர்களைப் பார்த்துக் கூறினார்:


''பாருங்கள்... தன் மேல் கல்லெறிந்தவனுக்கு, பழங்களைத் தருகிறது மரம். நாம் மட்டும் தண்டனை தரலாமா?''


'பகைவனுக்கு அருளும் நல்லுள்ளம் உடையவரே உண்மையில் உயர்ந்தவர்!' என்பது அந்த மன்னனுக்குப் புரிந்தது.

0 comments:

Post a Comment