Friday, 27 December 2013

டப்பிங் சீரியல் ஏன் பிடிக்கிறது?




சித்தியிலும் மெட்டிஒலியிலும் சரவணன் மீனாட்சியிலும் மயங்கிக் கிடந்த தமிழ்ப் பெண்களின் மனத்தை, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’, ‘என் கணவன் என் தோழன்’, ‘தெய்வம் தந்த வீடு’, ‘சிந்து-பைரவி’, ‘இது காதலா’, ‘மதுபாலா’ போன்ற டப்பிங் மெகா சீரியல்கள் எப்படிக் கொள்ளையடித்தன?


தமிழ் மெகா சீரியல்களை மாய்ந்து மாய்ந்துப் பார்த்த, அழுதும் புலம்பியும் பார்த்த பெண்கள் இப்போது டப்பிங் மெகா சீரியல்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கியதன் காரணங்கள்தான் என்ன?


90களில் நாடகங்கள் தொடர்களாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. வாரம் தோறும் அல்லது வாரம் இருமுறை என்ற அமைப்பிலும் 13 வாரத்தொடர் என்ற அமைப்பிலும் வெளிவந்தன. பெரும்பான்மையாக அவை ஸ்டூடியோவுக்குள் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை. ஒருவிதத்தில் அவை “வீட்டுக்கு வந்த மேடைநாடகங்கள்” என்ற அளவில் இருந்தன. அவற்றால் மக்கள் தங்களின் மனத்தைத் திரைப்படத்திலிருந்து சற்று விலக்கிக் கொண்டனர்.


2000த்தில் நாடகங்கள் திரைப்படத் தரத்தில் பெருந்தொடராக (மெகா சீரியல்) நாள்தோறும் வெளிவரத்தொடங்கின. அப்போதும் பிறமொழி நாடகங்கள் தரமற்ற மொழிபெயர்ப்பில் வெளிவந்தன. ஆதலால், அவற்றை மக்கள் வரவேற்கவில்லை. அதேவேளையில் தமிழ் மெகா சீரியர்கள் தரமுடன் தயாரிக்கப்பட்டன. வெளிப்புறப் படப்பிடிப்பு, தெளிவான ஒளி-ஒலி,  பெண்களின் குடும்பப் போராட்டங்களை மையப்படுத்திய கதையமைப்பு, பாடல்கள், சண்டைக் காட்சிகள் என அவை தம்மைத் திரைப்படங்கள் போலவே பாவித்துக்கொண்டன. அதில் மனத்தைப் பறிகொடுத்தத் தமிழ்ப் பெண்கள் அவற்றைத் “தொடர்த் திரைப்படங்கள்” என்று கருதுகின்றனர்.


2010களில் பிறமொழி மெகா சீரியல்கள் தமிழில் தரமாக மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவரத்தொடங்கின. குறிப்பாக ஹிந்திமொழி மெகா சீரியல்கள் பல 2013இன் தொடக்கத்தில் தமிழ் மொழியாக்கத்தில் வெளிவரத் தொடங்கின. அவற்றின் தரம் தமிழ்ப் பெண்களைத் தமிழ் மெகா சீரியல்களுக்கு இணையாக ரசிக்கும் அளவுக்குச் செய்துள்ளன.


70களிலிருந்து தமிழர்கள் தமிழ்ப் படங்களுக்கு இணையான வரவேற்பை ஹிந்திப் படங்களுக்கும் வழங்கிவருகின்றனர். அதைப் போலவே தமிழ்ப் பெண்கள் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்பப்படும் ஹிந்தி மெகா சீரியர்களுக்கும் இப்போது வரவேற்பு அளிக்கின்றனர்.


எந்தெந்த விதத்தில் அவை தமிழ் மெகா சீரியல்களைவிடச் சிறந்துள்ளன?


    டப்பிங் மெகா சீரியல்களின் புதுவிதமான கதைதான் தமிழ்ப்  பெண்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. தமிழ் மக்கள் அனுபவிக்காத, கேட்டறியாத புதுக்கதைகள். குறிப்பாக, பெரிய இடங்களில் நடந்துகொண்டிருக்கும் உண்மைக்கதைகள்.


    சின்னத்திரைக்கதை அமைப்பு யாரும் கணிக்க இயலாத வகையில் திருப்பங்களைக் கொண்டிருக்கும். நம் பெண்களுக்கு அவை ஒரு த்ரில்லர் அனுபவத்தைக் கொடுக்கின்றன.


    வசன அமைப்பு செறிவாக இருக்கிறது. ஒரே விஷயத்தை ஒவ்வொரு கதைமாந்தரும் ஒவ்வொருவிதத்தில் பேசி போரடிப்பதில்லை. வசனத்தின் குறுக்கே பின்னணி இசை ஒருபோதும் வருவதில்லை.


    கதைமாந்தர்களின் உடையலங்காரம், சிகையலங்காரம், பின்னணிக் காட்சி அமைப்பின் பிரம்மாண்டம், காமிரா நகர்வு போன்றவை பெரிய பட்ஜெட் திரைப்படத்துக்கு இணையானவை.


    ஒரு எபிசோடில் மூன்று காட்சிகளும் ஒவ்வொருகாட்சியிலும் இரண்டுக்கும் குறையாத திருப்பு முனைகளும் இருக்கும். சுவாரஸ்யம் கூடியபடியே இருக்கிறது.


    இந்தியப் பண்பாடு சார்ந்த வழக்கங்களைத் தற்காலத்துக்கு ஏற்ப முற்போக்காக மாற்றிப் பல காட்சிகளை இடம்பெறச் செய்கின்றனர். இரண்டு குழந்தைகளைப் பெற்ற ஒரு விதவைக்கு மறுமணம் செய்துவைத்தல் போன்றன.


    நகைச்சுவை என்ற பெயரில் “மொக்கை“  போடுவதில்லை.
    மாமியார் – மருமகள் சண்டைக்காட்சிகள்கூட இயல்பாக, அதிகக் காழ்ப்புணர்ச்சி இன்றிக் காட்டப்படுகின்றன. மாமியார்களை எதிரியாச் சித்தரிக்கும் போக்கு இருப்பதில்லை.


    இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கதைமாந்தர்களின் செயல்பாடுகளை நிதானமாகக் காட்டி, நேரத்தை ஓட்டிப் பார்வையாளர்களுக்கு அலுப்பூட்டுவதில்லை.


    எல்லாக் கதைமாந்தர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். டிவிஸ்ட் தருவதாக எண்ணித் திடீரென ஒரு புதுக்கதைமாந்தரை அறிமுகப்படுத்திப் பார்வையாளரைக் குழப்புவதில்லை.


    அழுகைக் காட்சிகளில் கதைமாந்தர்களின் கண்கள் இயல்பாகச் சிவக்கின்றன. அவர்களின் கண்களில் கண்ணீர் அரும்புகிறது.  அவர்களின் மனச் சோகத்தை இசையே பார்வையாளர்களுக்கு ஊட்டிவிடுகிறது. அந்த இயல்பான அழுகைப் பார்வையாளரின் உள்ளத்தை ஊடுறுவுகிறது.
    பிரிந்துள்ள தம்பதிகள், காதலர்கள் ஆகியோரின் காதல் மற்றும் அன்புறவுகளைச் சின்னச்சின்ன சலனங்களுடன் எடுத்துக் காட்டுவதில் டப்பிங் மெகா சீரியல்கள் உச்சத்தில் நிற்கின்றன.


    சீரியலை அப்டுடேட் செய்கிறேன் என்ற போக்கில் நாட்டு நடப்பு நிகழ்ச்சிகளை சீரியலுக்குள் திணித்து, வலிந்து காட்சிப் படுத்துவதில்லை. ஒரு வசனமாகக்கூட அவை வெளிப்படுத்துவதில்லை.


    கதாமாந்தர்களின் குணத்தைப் பிறரின் வசனங்களின் வழியாகத் தெரியப்படுத்தாமல் அந்தந்தக் கதாமாந்தர்களின் செயல்களின் வழியாகவே காட்டுகின்றனர்.


    ஒரு எபிசோடில் அத்தியாவசியமான தருணத்தில் மட்டுமே தீம் மியூசிக் வெளிப்படுகிறது.


    திருமணம் சார்ந்த விழாக்கள் அனைத்தும் சங்கடங்களின்றி மிகுந்த உற்சாகத்துடன் காட்டப்படுகின்றன. ஆனால், தமிழ் மெகா சீரியல்களோ திருமணக்கட்சிகள் என்றாலே ஏகப்பட்ட சண்டைகளும் மனக் கசப்புகளுமாகக் காட்டி “அவைதான் நம் வழக்கம்“ என்பதுபோலப் பாவனைசெய்கிறார்கள்.


தற்போது தமிழ்த் தொலைக்காட்சிகள் பரவலாக டப்பிங் மெகா சீரியர்களைப் ஒளிபரப்பத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், தமிழ் மெகா சீரியல்கள் வீட்டுப்பெண்களின் விரும்பங்களை நிறைவேற்றிச் சின்னத்திரையில் தாக்குப்பிடிக்குமா?

0 comments:

Post a Comment