Wednesday 18 December 2013

இசைக்கு மருந்தென்றே பெயர்!




‘நாள் பூராவும் ஓய்வின்றி வேலை செய்துவிட்டு வீடு திரும்புகிறீர்கள், வந்தவுடன் உங்களுக்கு விருப்பமான ஒலிநாடாவை வைத்துக் கேட்கிறீர்கள். சட்டென்று உள்ளுக்குள் ஒரு புத்துணர்வு முளைத்து, மனம் ‘ரிலாக்ஸ்’ ஆகிறது. இதமான இசை, மன, உடல் ரீதியான பாசிடிவ் மாறுதல்களை ஏற்படுத்துகின்றது’ என்கிறார்கள் வல்லுநர்கள். ஆனாலும் இது புதிய கண்டுபிடிப்பு இல்லை. பழங்காலத்திலிருந்தே தத்துவ ஞானிகள் பிதாகரஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இசைக்குள்ள மருத்துவ குணம், நோய் வராமல் தடுப்பது போன்ற பிற குணநலன்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏன்? பைபிள் பழைய வேதாகமத்தில், தாவூத் அரசர் வயலினின் நரம்பு மீட்டலில் வியாதி குணமடைந்ததாகக் குறிப்பு உள்ளது.

சில குறிப்பிட்ட ஸ்வரங்கள், ஜதிகள், ராகங்கள் உடல் ரீதியான மாறுதல்களை விளைவிக்கின்றன. வடஇந்திய டாக்டர் ஒருவர் கூறுகிறார், இசையை ரசிக்கும்போது, எண்டார்ஃபின் என்கிற திரவம் ஊற்றெடுத்து அது கேட்பவரின் மனநிலையை மாற்றுகிறது. ஹார்மோன் மாற்றங்களும் மனோபாவமும் தொடர்பு கொண்டதால் சில சிக்கல்களைத் தீர்க்கிறது. ஆனால் ஒன்று, நோயாளியின் ரசனைக் கேற்றபடியான சங்கீதத்தை மனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் டாக்டர் படேல்.

உடல் நலம், தெளிவான உரையாடல், மனப்படிமம் போன்ற அம்சங்களைக் கணக்கிட்டு சிகிச்சையை மேற்கொள்கிறோம். உதாரணமாக, இந்திய சங்கீதத்தில் காபி ராகத்துக்கு அமைதிப்படுத்துகிற குணம் உண்டு. பூர்வ தனஸ்ரீ என்கிற (இந்துஸ்தானி) ராகத்துக்குக் குழம்பும் மனத்தை நிலைப்படுத்துகிற சக்தி உண்டு.

இதுபோன்ற சிகிச்சையைக் காலையிலோ, மாலை அல்லது இரவிலோ செய்யலாம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரக்கெடுவுக்குள் இதைப் பிரிக்கவும் செய்யலாம். நீண்ட நேரம் கூடாது. காலியான வயிற்றுடன் இருக்கக் கூடாது. இதற்குக் கொஞ்சநாள் முன்பாகவே நோயாளியைத் தயார்ப் படுத்திவிட வேண்டும்" என்கிறார்.

அல்ஸைமர் வியாதி, மூளைக் காயங்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும் பிரசவ வேதனை ஆகியவற்றுக்கெல்லாம் இது போன்ற சிகிச்சைகளினால் பலனுண்டு. சிறுவர்கள் இது போன்ற சிகிச்சை முறைகளை நன்றாக எதிர்கொள்கிறார்கள். ‘ஆட்டிஸம்’ - கற்கிற குறைபாடு போன்ற சிலவற்றுக்கு இது பயனானது." என்கிறார் டாக்டர்.

‘மியூசிக் தெரபி’ குறித்து மேலை நாட்டில் ஆராய்ச்சிகள் செய்து சில பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன. ‘அமெரிக்கன் மியூசிக் தெரபி சங்கங்கள்’ இவற்றுக்கு ஆதரவு அளிக்கின்றன.

சென்னை சூளைமேட்டில், நாட்டியாச்சார்யா இசை - நாட்டியப் பள்ளி ஒன்றிருக்கிறது. இதை நடத்தி வரும் பாலச்சந்திர ராஜு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு ராகத்துக்கும் ஓர் இயல்பு உண்டு, பல நோய்களும் குணமாக ராகங்கள் இருக்கின்றன என்பதை விளக்குகிறார்.

நாட்டை - ஆஸ்துமா குணமாகிறது. வாசஸ்பதி - நாசி பிரச்சினை தீரும். ஹம்சவர்த்தினி - தலைச்சுற்றல் நீங்கும். நாத நாமக்கிரியா - வயிற்றுவலி தீரும். பேகடா - ரத்த அழுத்தம் சரியாகும். ஆனந்த பைரவி, சிந்து பைரவி - உயர் ரத்த அழுத்தம் சீராகும். மத்திய மாவதி - ஒற்றைத் தலைவலி நீங்கும்.

ஒரு வலியைப் பற்றிய அனுபவமுண்டு; வயிற்றுவலி சிறிது அதிகமாக இருக்கையில் உருக்கமான நாத நாமக் கிரியாவும், ஆனந்த பைரவியும் போக்க உதவியிருக்கின்றன," என்கிறார்.

இது சில ஆராய்ச்சிகளில் நிரூபணமாகியிருக்கிறது. பல தனிமனித அனுபவங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எது எப்படியோ, இசை இறைவனின் மகா வஸ்து என்பது மட்டும் மாறாத கருத்து.

 (‘கர்நாடக சங்கீதத்தை ரசியுங்கள்’ நூலில் இருந்து)

0 comments:

Post a Comment