Monday, 6 January 2014

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!



எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!


மனித மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும்,நிம்மதியாக வாழவுமே விரும்புகிறது.ஆனால் பலருக்கும் அது சாத்தியமாகவே இருப்பதில்லை.வருத்தம்,நோய்,துன்பம் தரும் நிகழ்வுகள் என்று மகிழ்ச்சியை பறிக்கும் எதிரிகள் இருக்கத்தான் செய்கின்றன.அப்படியானால் எப்போதும் சந்தோஷமாக எப்படி இருக்கமுடியும்? சரிதான்.ஒரு முக்கியமான விஷயம் இவை எல்லாம் தினமும் ஏற்படும் ஒரு விஷயமல்ல!


             நெருங்கிய உறவினரின் இழப்பு யாருக்கும் மகிழ்ச்சியை தராதுதான்.அதையே நினைத்துஏன் பல மாதம்,பல ஆண்டுகள் அந்த பாதிப்பிலேயே இருப்பதுதான் பிரச்சினை.இதுபோலவே மற்ற துன்பங்களுக்கும்,கடந்துவிட்ட கஷ்டங்களுக்கும் பொருந்தும்.நம்முடைய சிக்கல் என்பது ஏற்பட்டுவிட்ட பாதிப்பிலிருந்து எவ்வளவு விரைவில் மீண்டுவருகிறோம் என்பதே!


            மனிதனாக நீங்கள் பிறந்துள்ளதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் இல்லையா? உலகம் எதற்காக இருக்கிறது அதை யார் படைத்தார்கள்? மறுபிறவி இருக்கிறதா? இல்லையா? நாம் என்னவாகப்போகிறோம்? இதெல்லாம் விடை இல்லாத கேள்விகள் தான்.ஆனால் நீங்கள் பிறந்துள்ளதன் காரணம் எனக்கு தெரியும்.அது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு! அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு!


            எப்போதும் அப்படி இருக்க முடிவதில்லை என்பது உண்மைதான்.நூறு சதவீதம் என்பது ஒரு மாயை! அது முழுதும் உண்மையல்ல! அதனால் பெரும்பாலான நேரங்களில் உங்களால் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.எப்போதும் என்பது அதுதான்.என்னால் முடியவில்லை என்பவர்கள் முதலில் அதைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்கவும்.உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக சந்தோஷத்தை தேர்ந்தெடுக்கவும்.


           மகிழ்ச்சிதான் உங்கள் நோக்கமென்று முடிவு செய்துவிட்டால் அதை பெறுவது எளிது.முதலில் நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா? என்பதை கவனியுங்கள்.இல்லையென்றால் உங்களை சங்கடப்படுத்தும்,கவலைக்குள்ளாக்கும் விஷயம் எது என்று கண்டுபிடிக்கவும்.இப்போதே நீங்கள் பாதி வெற்றியடைந்த்து போலத்தான்.


           உறுத்தும் விஷயத்தைக் கண்டுபிடித்து விட்டாலே அதை தீர்க்கும் வழிகளும் உங்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.இயற்கை அனைவருக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தியை கொடுத்திருக்கிறது.தீர்க்க முடியாவிட்டால் உறவினரையோ,நண்பர்களையோ,அதற்கென உள்ள நிபுணர்களையோ அணுக வேண்டும்.பிரச்சினை தீர்ந்தால் மகிழ்ச்சிதானே வரும்.


       முக்கியமான விஷயம் உங்களை சுற்றி உள்ள  மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று நினைத்தால் மட்டுமே நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.நமது பக்கத்தில் நான்குபேர் அழுது கொண்டிருந்தால் உங்கள் மனநிலையும் பாதிக்கவே செய்யும்.அல்லது மற்றவர்கள் கஷ்ட்த்தில் இருக்கும்போது நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு சிகிச்சை தேவை.


           பிரபல பதிவர் ஒருவர் குறிப்பிட்ட சிலரின் பதிவு ஹிட்டாகிவிட்டால் அன்று முழுக்க சாப்பாடு,தூக்கம் எதுவும் இல்லையாம்.இந்த மாதிரி விஷயங்களால் உங்கள் சந்தோஷம் பாதிக்கப்படுவது கஷ்டம்.மகிழ்ச்சி சட்ட்த்துக்கும்,நெறிகளுக்கும் உட்பட்ட பொருள்களில் இருக்கவேண்டும்.நிகழ்காலத்தில் வாழ்வது,தவறுகளை திருத்திக்கொள்வது போன்றவை முக்கியம்.குழந்தையாக இருங்கள் .வாழ்வு எளிதாகும்.

0 comments:

Post a Comment