Saturday 12 October 2013

வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம் - சுற்றுலாத்தலங்கள்!

     வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம்

வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம்
சென்னை அருகே உள்ள வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம். கல்லிலே கலைவண்ணம் கண்டபுரம். பல்லவர்கால துறைமுக நகரம். இங்குள்ள புடைப்புச்சிற்பங்களும், கோவில்களும் உலகப்புகழ் பெற்றவை. தெய்வங்களின் உருவங்கள், புராணக்கதை காட்சிகள், சமுதாய நிகழ்வுகள் இங்கு சிற்பங்களாக சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.
கடற்கரை கோவில்:
மாமல்லபுரம் என்றவுடனேயே அலைகள் தொட்டுச் செல்லும் கடற்கரை கோவில்தான் முதலில் நினைவுக்கு வரும். இது இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.
பஞ்ச ரதம்:
பஞ்ச ரதம் என்றழைக்கப்படும் ஐந்து ரதங்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. முதலாம் மகேந்திரவர்மன், அவரது மகன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தைச் சேர்ந்தவை. நிஜத்தேர் போன்று காணப்படும் கோவில் வடிவிலான இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டவை. இவற்றுக்கு தர்மராஜ ரதம், பீம ரதம், திரௌபதி ரதம், நகுல- சகாதேவ ரதம் என பஞ்ச பாண்டவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தர்மராஜ ரதத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், அழகும் ஆச்சரியமும் கலந்தது. கோவில்களின் மாதிரிக்காக பஞ்ச ரதங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அர்ச்சுனன் தபசு:
சுமார் 30மீட்டர் உயரம், சுமார் 60மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்-படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எல பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டிக்கலாம் என தெரிகிறது. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.

மகிஷாசுரமர்த்தினி சிற்பம்:
கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபம்.
இவை தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய ஆச்சரியங்கள் கொண்டவை. இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984ல் யுனெஸ்கோ அறிவித்தது.
எப்படிப் போகலாம்?
சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ரயிலில் வருவோர் செங்கல்பட்டில் இறங்கி விட்டால் அங்கிருந்து 30கி.மீ தூர பயணம்தான். சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது. 

0 comments:

Post a Comment