Friday 6 December 2013

சூரியனைப்பற்றிய அறிய தகவல்!

 

சூரிய நமஸ்காரம்: 

தினமும் காலையில் நீராடிய பின் கிழக்கு திசைநோக்கி சூரியநமஸ்காரம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி, அதனைத் தொடர்ந்து காயத்ரீ மந்திரம் ஜபித்தல் ஆகியவை, சூரியனின் ஆற்றலை அதன் கிரணங்களின் மூலம் பெறும் முறைகளாகும். காலை, மாலை வேளைகளில் சூரியனை நோக்கி இருகைகளாலும் நீரை எடுத்து அர்க்யம் விடுவதும் சூரிய தோஷத்திற்கு தகுந்த பரிகாரமாகும். ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய துதிகளைச் சொல்வதால் நம் உடலும், மனமும் சூரிய சக்தியைக் கிரகித்துக் கொள்கின்றன. கிரகணம் பற்றிசுவாமி சிவானந்தர்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதிலிருந்து அமிர்தம் வெளிப் பட்டது.

பகவான் விஷ்ணு ஓர் அழகான மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை மயக்கி, அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் வழங்கினார். ஆனால் சுவர்பானு என்ற அசுரன் மட்டும் தேவர்களைப் போல உருவம் தாங்கி வந்தான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் அதை மோகினியிடம் தெரிவித்தனர். உடனே மோகினியாக இருந்த விஷ்ணு அசுரனின் தலையை கொய்து விட்டார். ஆனால், அதற்குள் அமிர்தம் கழுத்துவரை சென்று விட்டதால் அவன் சாகவில்லை. அவனது தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் அழைக்கப்பட்டன. தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய, சந்திரரைப் பழிவாங்கும் விதத்தில் அவ்வப்போது ராகுவும் கேதுவும் சூரியனையும் சந்திரனையும் விழுங்குகின்றனர். வானசாஸ்திரப்படி சூரியன், சந்திரன், பூமி ஒரே கோட்டில் வரும்போது, நடுவில் சந்திரனோ, பூமியோ வரும்போது சூரியசந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. கிரகண காலத்தில் மக்கள் புனிதநதிகளில் நீராடி, பசுக்கள், பணம் மற்றும் தங்கத்தை தானமாக அளிக்க வேண்டும். கிரகணத்திற்கு மறுநாள் ஏழைகள் மற்றும் சாதுக்களுக்கு உணவளிக்க வேண்டும். கிரகணம் முடிந்தபின் வீடுகளைச் சுத்தம் செய்ய வேண்டும். கிரகண காலத்தில் ஒருவன் சாப்பிடக்கூடாது. தொடங்கும் நேரத்தில் முன் உண்ட உணவு முழுவதும் ஜீரணமாயிருக்க வேண்டும். கிரகணம் விட்ட பிறகு சூரியனைப் பார்த்தபின்னரே உணவு உட்கொள்ள வேண்டும்.

கிரகணத்தின் போது சூரியனை கர்ப்பமான பெண்கள் பார்க்கவே கூடாது. அவர்கள் பார்த்தால் பிறக்கப்போகும் குழந்தைகள் செவிடு, ஊமை அல்லது குருடாகப் பிறக்கும். இதே காரணத்திற்காகவே கிரகணநேரத்தில் தாம்பத்ய உறவும் கொள்ளுதல் கூடாது. இந்தநேரத்தில் ஒருவர் தேள்கடிக்காமலோ மற்றும் காயத்திலிருந்து ரத்தம் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். இவற்றால் பயங்கரவிளைவு ஏற்படும். கிரகணநேரத்தில் ஒரு மண்புழுகடித்தால் கூட விஷம் இருக்கும். கிரகண நேரத்தில் ஜபம், தியானம் செய்பவர்கள் பெரும் நன்மை அடைவார்கள். இவ்வேளையில் செய்யும் ஜபம், சங்கீர்த்தனம் (இறைவனைக் குறித்த பாடல்கள்) அல்லல்களையும், பீடைகளையும் அகற்றும். தேவர்களின் ஆசி கிடைக்கும். நமது சிற்றறிவினால் பிரபஞ்சத்தில் நிகழும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியாது. எனவே, முனிவர்களின் வார்த்தைகளை நம்புங்கள். உலக வாழ்வு நிலையற்றது என்ற ஆன்மஞானமாகிய நிஜத்தை, அறியாமை மறைக்கிறது. எனினும், இந்தத்திரையாகிய கிரகணம் நிச்சயம் ஒருநாள் அகலும். நீங்கள் உங்கள் இயற்கையான புகழுடன் ஒளிர்வீர்கள். இதுதான் கிரகணத்தின் ஆன்மிகத் தத்துவமாகும்.

யார் இந்த சூரியன்?:


 சூரியனின் பிறப்பு குறித்து இருவேறு கதைகளைப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு தமது உந்திக்கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார். திருமாலின் ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள்மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க "ஓம்' என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு. அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்பது ஒரு கதை. பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுபடுத்த சப்தரிஷிகளை (ஏழு பேர்) உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு13 மனைவிகள் .அவர்களில் மூத்தமனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது மற்றொரு கதை. சூரிய புராணத்தில் இந்தக் கதைகள் சொல்லப்படுகின்றன. சூரியன் நவக்கிரகமண்டலத்தின் தலைவனாகத் திகழ்கிறார். இவர் ஏழுகுதிரைகள் பூட்டப்பட்ட, ஒற்றைச் சக்கர ரதத்தில் மேருமலையை வலம் வருகிறார். இவருக்குச் சாரதியாக அருணன் விளங்குகிறார். வைவஸ்தமனு, யமன், அசுவினிதேவர்கள், பிரதவன், ரைவவஸ்தன் என்ற மகன்களும், யமுனை என்ற மகளும் சூரியனுக்கு உள்ளனர். சூரியன் மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார். பிருகுமுனிவர், வால்மீகி, அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன் ஆகியோர் சூரிய தேவனின் அருளால் பிறந்தவர்கள் என்று ராமாயணமும், மகாபாரதமும் கூறுகின்றன.

சூரியனுக்கு கோயில் : 

ஒரிசாவிலுள்ள கோனார்க்கிலும், தமிழகத்தில் தஞ்சாவூர் அருகிலுள்ள சூரியனார்கோயிலிலும்சூரியனுக்கு கோயில்கள் உள்ளன. முன்னொரு காலத்தில் இமயமலைச் சாரலில் காலவமுனிவர் என்பவர் தவம் செய்து வந்தார். இவர் தம் தவசக்தியால் எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களைச் சொல்வார். ஒருநாள், தனக்கே தொழுநோய் வரவிருப்பதை அறிந்தார். நவக்கிரகங்களை நோக்கி வழிபாடு செய்தார். தொழுநோய் ஏற்படாமல் இருக்க கிரகங்கள் வரம் தந்து, அந்த நோயைத் தாங்களே ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். அந்த நோய்நீங்க பூலோகம் சென்று அர்க்கவனம் என்னும் இடத்தில் பிராணேசுவரரைப் பூஜித்தால் விமோசனம் பெறலாம் என்று பிரம்மா அருளினார். அதன்படியே அர்க்கவனமாகிய சூரியனார்கோயிலுக்கு வந்து விரதமிருந்து நவக்கிரகங்கள் நன்னிலை பெற்றனர். தனக்காக நோயை ஏற்றதியாக உள்ளம் படைத்த கிரகங்களுக்கு காலவமுனிவர் கோயில் அமைத்து நன்றிக்கடனைச் செலுத்தினார். இத்தலமே சூரியனார்கோயில் என்று பெயர் பெற்றது.

புதன்கிழமை பிறந்தவரா?:

 கிரகணத்துக்கு முன்னதாக சாப்பிடக்கூடாது என மகான்கள் சொல்கிறார்கள். நாளை அதிகாலையே கிரகணம் நிகழ இருப்பதால், இன்று மாலை 6.40 மணிக்குள் இரவு உணவை முடித்து விடுவது நல்லது. நாளை காலையில் கிரகண நேரத்தில் ஆறு, குளம், கடல்களில் நீராடி முன்னோருக்காக தர்ப்பணம் செய்யலாம். வீட்டில் இருப்பவர்கள் இறைவணக்கப் பாடல்களை கிரகண நேரத்தில் பாடுவதன் மூலம் எவ்வித தோஷமும் இல்லாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். எந்தக்கிழமையில் கிரகணம் நிகழ்கிறதோ, அந்த கிரகணநாளில் பிறந்தவர்கள், கிரகணம் முடிந்த பிறகு நீராடிவிட்டு, கோயில்களுக்குச் சென்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்வது நல்லது. இதுதவிர புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.


ஆணும் பெண்ணுமான சூரியனின் தேரோட்டி: சூரியனின் தேரோட்டியான அருணன், காஷ்யபருக்கும், விநதைக்கும் பிறந்தவர். காஷ்யபரின் மற்றொரு மனைவியான கத்துரு என்பவளுக்கு முதலில் குழந்தைகள் பிறந்தனர். இதனால், பொறாமை கொண்ட விநதை, ஆத்திரத்தில் தான் அடைகாத்த முட்டையை பருவம் வரும்முன் உடைக்கவே, ஒருகி கால் இல்லாதவனாக அருணன் பிறந்தான். இதனால் ஆத்திரமடைந்த அவன், ""என்னை கால் இல்லாமல் செய்த நீ, கத்ருவுக்கு அடிமையாகி, அதன்பிறகு என் சகோதரன் கருடன் மூலமாக சாபம் நீங்கப்பெறுவாயாக!'' என்று தன் தாய்க்கே சாபம் விடுத்தான். இவன் மீது இரக்கம் கொண்ட சூரியன், தனது சாரதியாக நியமித்துக் கொண்டான். ஒருசமயம் அருணன் இந்திரலோகத்தில் நடந்த கொலுவை வேடிக்கை பார்க்க, பெண் வடிவில் சென்றான். இந்தப் பெண்ணின் பேரழகைக் கண்ட இந்திரன், அவளோடு இணைந்ததால் வாலி பிறந்தான். இதன் காரணமாக இவன் சூரியலோகத்திற்கு தேரோட்ட தாமதமாகச் சென்றான். அருணன் இந்திரலோகத்தில் நடந்ததைச் சொல்லவே, அந்தப் பெண் உருவைப் பார்க்க வேண்டுமென சூரியன் கூறினார். அருணன் மீண்டும் பெண் வடிவம் எடுக்கவே, அவள் மீது ஆசைப்பட்ட சூரியன் அவளுடன் இணைந்ததால் சுக்ரீவன் பிறந்தான். ராமாயணத்தின் இரு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இந்த அருணனே காரணமாகிறான். இவனது மனைவிஸ்யேனி. இவளுக்கு சம்பாதி, ஜடாயு ஆகிய கருட குழந்தைகள் பிறந்தனர்.

விஷப்பூச்சி அருகே செல்லாதீர் : சூரிய கிரகண நேரத்தில் பூச்சிகளுக்கு சக்தி அதிகரிக்கும். இந்நேரத்தில் வீட்டில் திரியும் பூச்சிகள், பல்லிகள், கரப்பான் களை அடிக்கப்போகிறேன் என்று கட்டையுடன் திரியக்கூடாது. கிரகண நேரத்தில் இவை கடித்தாலோ, உடலில் ஊர்ந்தாலோ ஏற்படும் விளைவு கடுமையாக இருக்கும். குறிப்பாக, குழந்தைகளை இந்நேரத்தில் சுவர்களில் இருக்கும் துவாரங்கள் அருகே செல்லவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சூரிய வணக்கப்பாடல் :


ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி!
தவிக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
சூரிய போற்றி சீலமாய் வாழ சீர்அருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி! சுதந்திரா போற்றி!
வீரியா போற்றி! வினைகள் களைவாய்.
சூரிய ஸ்துதி: சூர்யம் சுந்தர லோக நாதம்
அம்ருதம் வேதாந்த சாரம் சிவம்
சுரேஷம், அமலம் லோகைக சித்தஸ்வயம்
இந்திராதித்ய நரதீபம் சுரகுரும்
த்ரைலோக்ய சூடாமணிம்
ப்ரம்ம விஷ்ணு சிவ ஸ்வரூப
ஹ்ருதயம் வந்தே சதா பாஸ்கரம்

சூரியன் உதித்ததும் இந்த ஸ்லோகத்தை
24 தடவை சொல்பவர்களுக்கு நோய்கள் நீங்குவதுடன் செல்வவளம் பெருகும்.

0 comments:

Post a Comment