Friday 6 December 2013

காதலர்களுக்கு, நோ ஐஸ்கிரீம்!



அண்மையில், என் நண்பரோடு கோவையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றேன். இரண்டு கப் ஐஸ்கிரீம் வாங்கி திரும்பும் போது, அக்கடையில், "இங்கு காதலர்களுக்கு அனுமதி இல்லை...' என, பெரிய போர்டு இருந்தது. ஆச்சரியமடைந்து, அந்த போர்டு பற்றி கடைக்காரரிடம் கேட்டேன். "அதை ஏன் சார் கேட்கறீங்க... முளைச்சு மூணு இலை விடாத, ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கற பசங்க, இங்கே ஜோடி ஜோடியா வர்றாங்க. ஒரு சின்ன கப் ஐஸ்கிரீம் வாங்கிட்டு, இங்கேயே இரண்டு மணி நேரம், டேரா போட்டு அரட்டை அடிக்கிறாங்க. அரட்டை அடிச்சாலும் பரவாயில்லை. ஒருத்தர் தொடையில் ஒருத்தர் கை போடறதும், முத்தம் கொடுக்கறதும், ஊட்டி விடறதும்... பார்க்க சகிக்கலே.


"ஆம்பளை பசங்க அடங்கி போனாலும், இந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும், தாராளமா இடம் கொடுக்கறாங்க. இவங்களை பார்த்து, மற்ற பெண்களும், குடும்பத்தோடு வருவோரும் கடைக்கு உள்ளே வர தயங்கறாங்க. இவ்வளவு, வெட்ட வெளிச்சத்திலும், இந்த இளசுகள் யாரையும் மதிக்காம, கொஞ்சம் கூட பயப்படாம, ரொம்ப மோசமா நடந்துக்கறாங்க. அதனால தான், "காதலர்களுக்கு அனுமதி இல்லை'ன்னு போர்டு வச்சுட்டேன். ஆளுங்களை பார்த்த உடனே, கண்டுபிடிச்சு, திருப்பி அனுப்பி விடுவேன். அவுங்களால வர்ற வியாபாரமும், பணமும் எனக்கு முக்கியமில்லை. ஒழுக்கம் தான் முக்கியம்...' என்றாரே பார்க்கலாம்.


பள்ளி, கல்லூரி காதல் ஜோடிகளே... என்னதான் வயதுக் கோளாறு இருந்தாலும், பொது இடங்களில் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கலாமா? உங்கள் வாழ்வில் அதற்கு என்று ஒரு நேரம், காலம் உண்டு. அப்போது காட்டுங்க உங்க வித்தைகளை. அதுவரை, எல்லாவற்றையும் கொஞ்சம் அடக்கி வாசிக்க கற்றுக் கொள்ளுங்களேன்.

0 comments:

Post a Comment